Dailyhunt
த.வெ.க. தலைவர் விஜய்யுடன் அரசு உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை!

த.வெ.க. தலைவர் விஜய்யுடன் அரசு உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை!

மீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 5 வருட திமுக ஆட்சியை வீழ்த்தி, 108 இடங்களில் வென்று தவெக ஆட்சி அமைக்கவுள்ளது.

ஆனால், 234 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கப் பெரும்பான்மைக்கு 118 தேவை எனும் பட்சத்தில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது. தவெக அதிக இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை என்பதால் மற்ற கட்சிகளுடன் தவெக ஆதரவு கோரி ஆலோசனை நடத்தி வருகிறது.

இத்தகைய சூழலில் தான் சிபிஐ, சிபிஎம், விசிக போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தரலாமா? வேண்டாமா? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. அதே நேரம் ஆட்சி அமைக்க தங்களை ஆதரிக்குமாறு விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தவெக சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இந்த சூழலில், தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.

இதனையடுத்து, தவெக பெற்ற 108 இடங்கள் மற்றும் காங்கிரஸ் 5 எம்.எல்.ஏக்கள் என 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் தவெக தலைவர் விஜய் சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனுக்குச் சென்று பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று (06.05.2026) சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்நிலையில் விஜய்யின் இல்லத்திற்குத் தமிழகத் தலைமைச் செயலாளர் சாய் குமார் மற்றும் காவல்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நேரில் சென்று அவரைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, ஆட்சி மாற்றத்திற்கான நிர்வாகக் கட்டமைப்பு, பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் பதவியேற்பு விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய அரசு பொறுப்பேற்பதற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய நிர்வாக நடைமுறைகள் குறித்து தலைமைச் செயலாளர் சாய் குமார், விஜய்க்கு விளக்கமளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகக் கூறப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran