மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இருப்பினும், கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த கூட்டம் நடக்கவில்லை.
இந்நிலையில், தற்போது மீண்டும் தென்மாநில முதல்வர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் நாளை நடக்க உள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்வர் வி.டி.சதீஷன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த், ஆந்திர முதல்வர் சந்திரபாபு மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோ கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
மேலும், இந்த கூட்டத்தில் அந்தந்த மாநிலத் தலைமைச் செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொள்வதாகக் கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி இந்த கூட்டத்தைப் புறக்கணிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை (20-08-26) காலை 10.30 மணி முதல் முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்குப் புதுச்சேரி மாநில முதல்வர் மற்றும் துணை நிலை ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்திற்குத் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்துகொள்ள இருக்கும் நிலையில், ஒரே கூட்டணியில் இருக்கும் முதல்வர் ரங்கசாமி இந்த கூட்டத்தைப் புறக்கணிப்பது கவனம் பெற்றுள்ளது. புதுச்சேரியில் என் டி ஏ கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தேர்தல் வெற்றிக்குப் பிறகு இதுவரை டெல்லி சென்று பாஜக உயர்மட்ட தலைவர்களைச் சந்திக்கவில்லை. அதே போல, ஆட்சியில் பாஜகவினருக்கு அமைச்சர் பதவி வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், என் டி ஏ கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தான் இந்த புறக்கணிப்பிற்கும் காரணமாக இருக்குமோ என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

