தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்று முன்தினம் (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில், நிர்வாக நலன் கருதி ஐ.ஏ.எஸ். மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தின் தலைமைச் செயலாளர் ந. முருகானந்தம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாய்குமாரை நியமித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே போன்று லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதமும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சந்தீப் மிட்டல் தமிழ்நாடு அரசின் ஆயுதப்படை மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் காவல்துறை தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரி பணியில் இணைந்தது குறித்த அறிக்கையை இன்று (08.04.2026) மாலை 6:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் திடீரென தலைமைச் செயலாளர் மாற்றம் செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ்ஸை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நியாயமான - சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பா.ஜ.க. ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது. அரசியல்சட்டம் தேர்தல் ஆணையத்திற்குத் தந்துள்ள பாதுகாப்பு பா.ஜ.க.விற்குத் தேர்தல் வேலை பார்ப்பதற்கு அல்ல. நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருப்பது, ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. பாஜக பிராக்சி ஆட்சி நடத்திய பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கிறார்கள். அவர்களை பா.ஜ.க.வின் தூண்டுதலில் மாற்றியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க, அ.தி.மு.க.வுடன் கைகோத்து நடத்த இருக்கும் தேர்தல் முறைகேடுகளுக்குத் துணை போகத் துடியாய்த் துடிப்பது தேர்தல் ஆணையத்திற்கு அழகு அல்ல. ஆணையத்தின் அலுவலர்கள் இன்று இருக்கலாம்; நாளை பதவியிலிருந்து போய் விடலாம். ஆனால் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியல்சட்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும் - சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையரை நானே தேர்வு செய்வேன் என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிரதமருக்கோ அல்லது அவர் வழிநடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கோ தேர்தல் ஆணையத்தின் புனிதத்தன்மை புரியப் போவதில்லை என்பதைத் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரை மாற்ற பா.ஜ.க. தூண்டி விடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன. எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. படுதோல்வியில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அ.தி.மு.க. - பா.ஜ.க. அடங்கிய என்.டி.ஏ. கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம்' எனத் தெரிவித்துள்ளார்.

