Dailyhunt
"தேர்தல் நேரத்திலும் திமுக அரசின் காவல்துறை ஏவல் துறையாக இருக்கிறது" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

"தேர்தல் நேரத்திலும் திமுக அரசின் காவல்துறை ஏவல் துறையாக இருக்கிறது" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியில் கள் விற்பனை செய்வதாக ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு ரகசிய புகார் வந்ததாகக் கூறப்படுகிறது.

அதன்படி, போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பனைமரத்தில் பதநீர் எடுப்பதற்காக பானை வைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்ட போலீசார், அந்த பனைமரத்தின் உரிமையாளர் யார் என விசாரணை நடத்தி உரிமையாளர் மணிகண்டன் என்பவரது வீட்டிற்கு நடத்தினர்.

அதனை தொடர்ந்து, மணிகண்டன் மற்றும் அவரது தந்தை பெருமாள் ஆகியோரை பனைமரம் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று பனைமரத்தின் மீது ஏறி பானையை எடுக்குமாறு போலீசார் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனை கண்ட மணிகண்டனின் உறவினர்கள் அங்கு திரண்டனர். அப்போது மணிகண்டனுக்கும் காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா அங்கிருந்த ஒரு மரக்கட்டையை எடுத்து மணிகண்டனை அடிக்க ஓங்கியதாகவும், அதை மணிகண்டன் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இசக்கிராஜா தலையில் கட்டை விழுந்து ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த இசக்கிராஜா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மணிகண்டனை நோக்கி சுட்டுள்ளார். இதில் மணிகண்டனின் கால்களில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காயமடைந்த 2 பேரும் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, 'திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் மருதம்புத்தூர் ஊராட்சியில் மணிகண்டன் என்பவர் பனைமரத்தில் பதநீர் இறக்கியபோது, கள் இறக்கியதாக பொய்ப் புகார் கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கி சூடு நடத்தியதில், 2 துப்பாக்கி குண்டுகள் துளைத்து பனைமரம் ஏறும் தொழிலாளி மணிகண்டன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதுமுள்ள பனைமரம் ஏறும் தொழிலாளர்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்திலும், எந்தவித கட்டுப்பாடுமில்லாமல் திமுக அரசின் காவல்துறை தொடர்ந்து ஏவல் துறையாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. பதநீர் இறக்கிய தொழிலாளி, கள் வடித்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி, துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களை வலியுறுத்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran