கடந்த ஆகஸ்ட் 26 அன்று திபெத்தின் எல்லைப் பகுதியில் உருவான பெருவெள்ளம் நேபாளத்தின் போட்டேகோஷி நதி வழியாக பல்வேறு மாவட்டங்களில் நுழைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பெரு வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட சகதி மற்றும் பாறைகள் ஏளாமான வீடுகள் மற்றும் கட்டமைப்புகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான பேர் உயிர் இழந்துள்ளதாக கூற்படும் நிலையில், பல ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தேநீர் அருந்த இடைவெளி எடுத்துக்கொண்ட 5 இந்தியர்கள் உயிர் தப்பிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீர்கஸ்கர் மாநிலம், ராய்பூரை சேர்ந்த 50 முதல் 60 வயதிற்குட்பட்ட நாராயண் சென், தினேஷ் ஒஜா, பிரேம்சிங் ஜகத், யதேந்திர பிரகாஷ், தினேஷ் சிங் தாகூர் ஆகிய 5 நண்பர்கள் கடந்த ஆகஸ்ட் 22 அன்று நேபாளத்திற்கு வாடகை வாகனத்தில் சுற்றுலா சென்றனர். இவர்கள் நேபாளத்திற்குச் சென்ற 5 வது நாளான ஆகஸ்ட் 26 அன்று, தாடிங் மாவட்டத்தில் மலேகு என்ற பகுதியில் தேநீர் அருந்த வாகனத்தை நிறுத்தினர். அப்போது அவர்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்த வேளையில் தான் இந்த பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனால், அப்பகுதியிலிருந்த மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். என்ன சத்தம் கேட்கிறது என அவர்கள், தேநீர் அருந்திக்கொண்டே பார்த்துள்ளனர். அப்போது தான் சகதியுடன் வந்த கோரத் தாண்டவத்துடன் பெரும் ஆபத்தை ஏற்படுத்திய அந்த ஆற்று வெள்ளத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இவர்கள், தேநீர் இடைவேளை எடுத்துக்கொண்டது, இவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. ஒருவேளை, இவர்கள் 10 - 15 நிமிடங்களுக்கு முன்பாகவோ அல்லது அதைவிட விரைவாகவோ முன்னோக்கிச் சென்றிருந்தால் அவர்களும் அந்த பெரு வெள்ளத்தில் சிக்கியிருக்கக் கூடும். அவர்கள் தேநீர் இடைவேளை எடுத்துக்கொண்ட அந்த காலதாமத இடைவெளியால் அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் உயரமான மற்றும் பாதுகாப்பான பகுதிக்கு சென்றனர். அங்கு மின்சாரம் உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகளின் குறைபாடுகள் இருந்தாலும், போதுமான இணைய வசதி இருந்ததால் அவர்கள் தங்களது வீட்டில் உள்ளவர்களுக்குத் தகவல் கொடுத்தனர். அதே நேரத்தில், இந்திய அவசர மீட்பு குழுவினருனடும் அவர்கள் தொடர்பு கொண்டனர். இரண்டு நாட்களாக அங்கிருந்த மக்கள் இவர்களுக்கு உணவு கொடுத்து உதவி செய்துள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் 5 பேரும் இரண்டு நாட்களாக அந்த வாகனத்திலேயே உறங்கியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை (29-08-26) அன்று பாதுகாப்பாக வீடு திரும்பினர்.

