Dailyhunt
"திமுக கூட்டணிக் கட்சிகள் ஒருபோதும் தவெகவை ஆதரிக்காது" - அடித்து சொன்ன வைகோ!

"திமுக கூட்டணிக் கட்சிகள் ஒருபோதும் தவெகவை ஆதரிக்காது" - அடித்து சொன்ன வைகோ!

டந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெற்றி பெற்றுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே மெஜாரிட்டி உடன் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தவெக வசம் தற்போது சுமார் 108 தொகுதிகள் மட்டுமே உள்ளது. மீதம் 10 தொகுதிகள் தேவையாக உள்ள நிலையில் எந்தக் கட்சியில் இருந்து தவெக ஆதரவை கோரப் போகிறது என்பது கேள்வியாக எழுந்துள்ளது. திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகளிடம் ஆதரவை கோருமா அல்லது நேரடியாக அதிமுகவிடம் ஆதரவு கோருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே, மற்ற கட்சிகளுடன் ஆதரவு கோரி ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரம் அவகாசம் வேண்டுமென தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், மற்ற கட்சிகளுடன் ஆதரவு கோருவதற்கு தவெக முனைப்பு காட்டி வருகிறது. அதே போல், சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தரலாமா? வேண்டாமா? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த பரபரப்பான நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவர்களிடம் இன்று (05-05-26) ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைகோ, 'திமுக கூட்டணி கட்சிகள் ஒருபோதும் வேறு கட்சியை ஆதரிக்காது. அந்த எண்ணமே வராது. நாங்கள் மிகவும் உறுதிப்பாட்டோடு திமுகவுடன் இருக்கக்கூடியவர்கள். இந்த கூட்டணியில் இருக்கக்கூடியவர்கள் எந்த கட்சியோடும் தொடர்பு வைக்கவில்லை, தொடர்பு வைத்ததாகவும் தெரியவில்லை, தொடர்பு வைக்கவும் முடியாது. இந்த கூட்டணியில் அசைகின்ற யாரும் எந்த கட்சியுடனும் இல்லை.

மக்கள் தீர்ப்பு என்பதை மதிக்கப்பட வேண்டியது. ஆனால் திமுக அரும்பெரும் சாதனைகளை ஆட்சி காலத்தில் நிகழ்த்தி இருக்கிறது. அவற்றை தொடர வேண்டிய கடமை புதிதாக ஆட்சி அமைக்கின்ற கட்சி தொடர வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. ஒருகாலும் இங்கு இருக்கக்கூடிய எந்த கட்சியும் பெரும்பான்மைக்கு ஆதரவு கொடுக்கும் முடிவுக்கு வராது. இந்த கூட்டணியில் யாரும் அதற்கான அசைவை கூட கொடுக்க மாட்டார்கள்' எனத் தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran