தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இது தவிர நாதக, தவெக, ராமதாஸ் - சசிகலா கூட்டணி ஆகிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று (04-04-26) வெளியிட்டார். சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், திமுக தலைமையிலான தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட அதை பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பெற்றுக் கொண்டார். அந்த அறிக்கையில், தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பியூஷ் கோயல், 'முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் எனது கேள்வி என்னவென்றால், தமிழகத்தின் பணம் எங்கே போனது? தொழில் துறை, கடினமாக உழைக்கும் விவசாயிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மீனவர்கள், திறமையான மற்றும் விடாமுயற்சியுள்ள இளைஞர்கள் என அனைத்து வளங்களையும் கொண்டுள்ள இந்த மாநிலத்தில் ஏன் கருவூலம் காலியாக இருக்கிறது? தமிழக அரசு வாங்கிய கடன் வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கிறது, திவாலாகும் நிலையில் தமிழ்நாடு உள்ளது. மாநில முதலமைச்சர் இதற்குச் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. அவர் பொய்களைப் பேசி மக்களின் கவனத்தைத் திசை திருப்ப விரும்புகிறார். இங்குள்ள பணம் எங்கே போனது என்று அவர் சொல்ல விரும்பவில்லை?
அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரமாக திமுக குடும்பம் பயன்படுத்துகிறது. உதயநிதி, சபரீசன், கனிமொழி என குடும்பத்துக்காக அரசு நிதி பயன்படுத்தப்படுகிறது. ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாய் தமிழகத்தில் எங்கே செல்கிறது? நிதியை பயன்படுத்துவதில் திமுக அரசு பொறுப்பின்றி நடந்துகொள்கிறது. ரூ.12 லட்சம் கோடி தொழில் முதலீடு என்றார்கள், ஆனால் எதுவும் வரவில்லை. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நிறுவனங்கள் ஏன் தயங்குகின்றன? சிறு குறு நிறுவனங்கள் முடக்கப்பட்டு 5 லட்சம் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து ஊழியர்களின் பணப் பலன்களை திமுக குடும்பம் அபகரித்துவிட்டது.
எம்.ஜி.ஆரும் வாரிசு அரசியலை ஊக்குவிக்கவில்லை, ஜெயலலிதாவும் ஊக்குவிக்கவில்லை. முதலமைச்சர் பதவிக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ள குடும்ப ஆட்சிக்கு காங்கிரஸும் திமுகவும் தான் காரணம். கருணாநிதிக்குப் பிறகு மு.க. ஸ்டாலின், மு.க. ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்குப் பிறகு...? மீண்டும் ஒருமுறை திமுகவைத் தேர்ந்தெடுக்கும் தவறை நீங்கள் செய்தால், இன்பநிதி ஸ்டாலின் தான் உங்கள் அடுத்த முதலமைச்சராக இருப்பார். ஊழல் செய்யும் திமுக தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. மோடி வழிகாட்டுதலுடன் எடப்பாடி பழனிசாமியின் நல்லாட்சி வரும்' என்று கூறினார்.

