தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது.
234 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 தேவை எனும் பட்சத்தில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது. தவெக அதிக இடங்களை வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை என்பதால் மற்ற கட்சிகளுடன் தவெக ஆதரவு கோரி ஆலோசனை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, மற்ற கட்சிகளுடன் ஆதரவு கோரி ஆட்சி அமைப்பதற்கும், பெரும்பான்மையை நிரூபிக்கவும் 2 வாரம் அவகாசம் வேண்டுமென தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இதனால், மற்ற கட்சிகளுடன் ஆதரவு கோருவதற்கு தவெக முனைப்பு காட்டி வருகிறது. அதே போல், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தரலாமா? வேண்டாமா? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இன்று (06-05-26) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், 'தமிழ்நாட்டில் விவாத அரசியலுக்கும் வெறுப்பு அரசியலுக்கும் இடமில்லை. மக்கள் மதவாதத்தை நிராகரிக்கிறார்கள். தவெக தலைவர் விஜய்யை பொறுத்தவரையிலும் பா.ஜ.கவிற்கு எதிராக நின்று வெற்றி பெற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியினுடைய நிலை என்பதை அரசியல் விவகாரக் குழு முடிவெடுத்திருக்கிறது. அந்த முடிவை அகில இந்திய பொதுச் செயலாளர் கிரிஷ் சோடங்கர் அறிவிப்பார். எங்களை பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டில் பா.ஜ.க வரக்கூடாது, ஆர்.எஸ்.எஸ் வரக்கூடாது. அதற்காக தான் நாங்கள் சண்டை போடுகிறோம். எங்களை பொறுத்தவரைக்கும் திமுகவுடான கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது. 2026 தேர்தல் முடிவடைந்தது.
தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு ஏற்றுக்கொள்ளப்படாது என ஒரு சிலர் கூறினார்கள். ஆனால் தமிழக மக்கள் அதற்கு பதில் சொல்லிவிட்டார்கள், தமிழக மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். திராவிட அரசியலைத் தான் தவெக தலைவர் விஜய்யும் பேசுகிறார். அதனால் கொள்கைகளில் ஏறக்குறைய திமுக, அதிமுக, எம்.ஜி.ஆர், கலைஞர் போன்றவர்கள் பேசுய அதே அரசியலைத் தான் அவரும் பேசுகிறார். இந்த மண் என்பது பா.ஜ.கவிற்கு எதிரான மண், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிரான மண்' என்று கூறினார்.
முன்னதாக, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. அதன்படி, காங்கிரஸ் தலைமை விஜய்க்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவை மட்டுமே விஜய் பெற வேண்டும் எனவும், பா.ஜ.க கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறக் கூடாது எனவும் காங்கிரஸ் கட்சி விஜய்க்கு நிபந்தனை விதித்துள்ளதாகத் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

