மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரம் அருகே பழமை வாய்ந்த சென்ட்ரல் திரையரங்கம் இயங்கி வந்தது.
இத்தகைய சூழலில் கடண்ட சில ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்கம் மூடப்பட்ட நிலையில், தற்போது அங்கு விளையாட்டுப் பொருட்கள் வைக்கும் குடோனாகவும், கார் பார்க்கிங் பகுதியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (11.09.2026) இரவு சுமார் 7 மணியளவில், சென்ட்ரல் திரையரங்க வளாகத்தில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் கடை நடத்தி வருபவர்கள், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்ததகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்ததால், கூடுதலாக தல்லாகுளம், அனுப்பானடி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இதனையடுத்து சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக, 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
அதே சமயம் திரையரங்க வளாகத்திற்குள் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், தீயணைப்பு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதிகளில் இருந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொன்றாக வெளியே எடுத்தனர். இந்த தீ விபத்து காரணமாக பாதுகாப்பு கருதி, மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள மேல கோபுர வீதி, டவுன்ஹால் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மேலும் தீ விபத்து காரணமாக திரையரங்க கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. அதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, திரையரங்க வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பேட்டரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

