திருப்பரங்குன்றம் கல்தூண் வழக்கு தொடர்பாக கடந்த 3 நாட்களாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
அதாவது, திருப்பரங்குன்றம் மலை கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், ஒருமுறை நடவடிக்கையாக, நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ளது.
மேலும், ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதிப்பதை இறுதி அங்கீகாரமாகக் கருதக் கூடாது என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இதேபோன்ற வழிபாடுகளைக் கோருவதற்கு இதைப் பயன்படுத்த முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பா.ஜ.க, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகள், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மேலும், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தவெக தலைமையிலான தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில், இந்த விவகாரத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், சீராய்வு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாளை (23.11.2026) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட உள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து ஐயூஎம்எல், மஜக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாகச் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தனர். அதில் அவர்கள் தெரிவித்ததாவது, 'தமிழ்நாட்டில் முஸ்லிம்களை விட இந்துக்கள் தான் அதிகமாக நாகூர் தர்காவுக்கு வருகிறார்கள். இப்படியான சமூக நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும் என்பது தான் பா.ஜ.கவுக்கும் அவர்கள் சார்ந்த அமைப்பினர்களுக்கும் நோக்கம். அதனால் தமிழ்நாட்டில் திமுகவாக இருக்கட்டும், அதிமுகவாக இருக்கட்டும் இப்போது இருக்கும் அரசாங்கமாக இருக்கட்டும் சமூக நல்லிணக்கம் நிலைநாட்டப்பட வேண்டும்.
உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவதை தான் கோயில் நிர்வாகம் என நடைமுறைப்படுத்தி நடுவில் சிலர் புகுந்து புதிய பிரச்சனையை கிளப்புகின்றனர். திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் மட்டும் தான் தீபம் ஏற்ற வேண்டும். தர்கா அருகே உள்ள தூணில் ஏற்றக்கூடாது. இவ்வழக்கு தொடர்பாக சிறந்த வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் எங்கள் கோரிக்கை மனுவை நாங்கள் நாளை அளிப்போம். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்ததை வரவேற்கிறோம்.' எனத் தெரிவித்தனர்.

