Dailyhunt
திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீவிர தேர்தல் பரப்புரை!

திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீவிர தேர்தல் பரப்புரை!

மிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நாளையுடன் (06.04.2026) நிறைவு பெறவுள்ளது. இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதற்கிடையே சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று (04.04.2026) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்படி நகராட்சியின் 16வது வார்டு முதல் 21வது வார்டு வரை உள்ள பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது கடந்த 5 ஆண்டுக் கால திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் தமிழக முதல்வர் செயல்படுத்திய முன்னோடித் திட்டங்கள் குறித்துப் பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும் நீண்ட காலமாகக் கோரிக்கையாக இருந்த, பட்டா இல்லாத ஏழை எளிய மக்களுக்கு உடனடிப் பட்டா வழங்கப்பட்டது. புதிய சாலை வசதிகள், சிறுவர்களுக்கான பூங்காக்கள், நவீன அங்கன்வாடி மையங்கள் மற்றும் ரேஷன் கடைகள் போன்ற எண்ணற்ற பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். இவ்வாறு வாக்கு சேகரிப்பின் போது பேசிய அவர், 'உங்கள் வீட்டுப் பிள்ளையாகிய நான் மீண்டும் உங்களுக்காகப் பணியாற்றிட, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பெல் (BHEL) பாய்லர் ஆலை வளாகத்தில் நடைபெற்ற இரவு நேர வாரச் சந்தைக்குச் சென்ற அவர், அங்கிருந்த இல்லத்தரசிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நேரில் சென்று வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வின் போது துவாக்குடி நகரச் செயலாளர் காயாம்பு, நகர கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran