அதிமுக வில் இருந்து ஏராளமானோர் விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பல முக்கிய தலைவர்கள், தலைமை மீதான அதிருப்தியின் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.
மேலும், சிலர் விரைவில் விலக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் மூன்று மாநிலங்களுக்கு இடைத்தேர்தலை அறிவித்தது. அந்த சமயத்தில் தமிழகத்திற்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்திற்கு இடைத்தேர்தல் குறித்தான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளையும், விவாதங்களையும் எழுப்பின.
இதனிடையே, மேலும் பல அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்களும் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் அதிமுக நிர்வாகிகள் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்க்கரைச் சந்திக்க உள்ளனர். அதிமுக சார்பாக நடைபெற உள்ள இந்த சந்திப்பில், சட்டமன்ற கொறடா அக்ரி கிருஷ்ண மூர்த்தி மற்றும் இன்பதுரை உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்திக்க உள்ளனர்.
ஏற்கனவே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரம் நடத்தப்படுவதாக அக்கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுவரை, தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள ஆறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடமும் குதிரை பேரம் நடத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படக்கூடாது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

