2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சரவை இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 'இயக்க மறு சீரமைப்பு திட்டம்' என்ற பெயரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமையில் ஜூலை 23 ஆம் தேதி முதல் சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பயிற்சி கூட்டம் நடைபெற்று வந்தது.
அந்த பயிற்சி கூட்டத்தில் இறுதி நாள் இன்று (01-08-26) என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் கலந்துகொள்ள நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்த அவரை தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். அதனை தொடர்ந்து, இன்று மாலை மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார். அப்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டத் தலைவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் ராகுல் காந்தி வழங்கினார்.
இதையடுத்து ராகுல் காந்தி மாமல்லபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், 'நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும், தமிழர்களின் எதிர்காலத்தையும், தமிழ் மொழியின் எதிர்காலத்தை சிதைக்க முயற்சி நடக்கிறது. பா.ஜ.கவால் தொகுதி மறுவரையறை செய்ய ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கவும், அவர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பாஜக சதி. தமிழ்நாட்டில் எட்டப்பன் என்ற ஒரு வரலாற்றுப் பாத்திரம் இருந்தது. எட்டப்பன் என்பது அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யப்பட்ட துரோகத்தின் சின்னமாகும்.
தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் எட்டப்பர்கள். அவர்கள்தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்குத் துரோகம் செய்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவை தமிழ்நாட்டு மக்களையும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் தாக்க அனுமதிக்கிறார்கள். எந்தவொரு தமிழரும் இந்தத் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கக் கூடாது. ஒவ்வொரு தமிழரும் தொகுதி மறுவரையறையை எதிர்க்க வேண்டும். ஒவ்வொரு தமிழ் கட்சியும், தேசிய கட்சியும் சபையில் தொகுதி மறுவரையறையைத் தோற்கடிக்க வேண்டும்' என்று கூறினார்.

