Wednesday, 17 Jan, 3.27 am நக்கீரன்

முக்கிய செய்திகள்
வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!

வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!

கவிஞர் வைரமுத்துவின் 'தமிழை ஆண்டாள்' கட்டுரை சர்ச்சையாகிவிட்ட நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என, தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், இந்து சமயச் சொற்பொழிவாளரும் எழுத்தாளருமான சுகி சிவம், கவிஞர் வைரமுத்துவுக்கு சில கேள்விகள் எழுப்பியிருக்கிறார்.

'அத்துமீறல் ஓர் அலசல்' என்னும் தலைப்பில் சுகி சிவம் வெளியிட்ட கேள்விகள் இதோ..

1) பரந்த வாசிப்பும், சிறந்த மொழித்திறனும், சொந்த சிந்தனைகளும் உடைய மதிப்புறு மனிதர் "கவிஞர் வைரமுத்து" என்பதில் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. ஆனால், ஆண்டாள் குறித்த கட்டுரையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் எழுதியிருப்பதால், சில கேள்விகள் எழுப்ப வேண்டியுள்ளது.

2) இன்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வுச் செய்தியை பதிவிடும்போது - அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் எழுதாமல் நழுவியது ஏன்? இது தவறு, அல்லது சரி என்று காரண காரியங்களுடன் எழுத வேண்டியது நேர்மையான இலக்கியவாதியின் கடமை அல்லவா? அந்த நேர்மை உங்களிடம் இல்லாமல் போனது ஏன்?

3) "கோட்டுக் கால் கட்டிலின் மேல் " என்ற பாசுரத்திற்கு உரைதாரர் விளக்கங்களை "தீராப் புலமையின் திமீர் காட்டி" என்று கண்டுபிடிக்க முடிந்த உங்களால், பல்கலைக்கழக ஆய்வு மட்டும் தவறு என்று கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன்?

4) பலரது பல கால நம்பிக்கைகளுக்குப் பகையாக (முரணாக அல்ல) ஒரு செய்தியை எழுதும்போது தக்க ஆதாரங்களையும், நிரூபணங்களையும் தந்திருக்கவேண்டும். மேம்போக்காக மேற்கோள் எவ்வாறு ஆதாரமாக - நிரூபணமாக ஆக முடியும்? ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில், அவ்வாறு வாழ்ந்து காலம் கழித்தாள் என்பதற்கு என்ன சான்றுகளை சேகரித்தீர்கள்?

5) பக்தி இலக்கியம் பற்றி ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்புடன் எழுதிக் கொண்டிருக்கும் நீங்கள், பகுத்தறிவு நண்பர்களின் கண்டனத்தில் இருந்து தப்ப, அவர்களை திருப்திபடுத்த, இப்படியொரு சாமர்த்தியத்தைக் கையாண்டீர்களா?

6) சமண - பவுத்த சமயங்களின் கடுநெறிகளுக்கு மாறான துய்ப்புன் கதவுகளைத் திறந்துவிட்ட அக்கால மதநெறிகளின் குறியீடு -ஆண்டாள் என்கிறீர்கள். இது பிழை.

சமண - பவுத்த மதங்களால் வாழ்க்கை இறுக்கமானதும், பக்தி இயக்கங்கள், அதனை தளர்த்த முயன்றதும் வரலாற்று உண்மை என்பதை அறிவேன். ஆனால், துய்ப்பு நெறி சமயத்தின் செய்தி அன்று. நுட்பமான வேறுபாடு தெரியவேண்டும். உலகியல் துய்ப்பினும் பரம்பொருள் துய்ப்பே மேலானது என்கிற அணுகுமுறையே ஆண்டாளின் செய்தி.

"இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு

உற்றோமே யாவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்"

என்கிறாள் ஆண்டாள்.

மற்றை நம் காமங்கள் மாற்று என்பது உலகியல் துய்ப்புக்கு எதிரான நிலைப்பாடு அல்லவா. உண்மையில் ஆண்டாளின் தமிழ், "கடவுளைக் காதலிக்கும் அச்சமற்ற அழகியல் உணர்வின் உச்சபட்ச வெளிப்பாடு. "ஆன்மாவின் அனுபவத்தை சாரீரத்தின் சுகமாகவும் சொல்ல முயன்ற முயற்சி. கடினமானதாகக் கண்டறியப்பட்ட கடவுள் தத்துவத்தை, கலவி, காமம், காதல் என்கிற விசயத்தை, சுகநிலையில் பேசமுடியும் என்று நிரூபித்த கவிதாயினியின் சாதனை அது. முக்தி என்று சூன்ம விடுதலை பேசிய ஒரு சமயத்தின் முழுச்சுதந்திரம் வெளிப்படுத்திய தமிழ் கோதைத்தமிழ். ஆண்டாள் தமிழ் பதிமூன்று நூற்றாண்டுகளைக் கடந்தும் உயிர் வாழ்கிறது. ஆனால், அடுத்த நூற்றாண்டு வரை உங்கள் கவிதைகள் தாக்குப் பிடித்தால், அதுவே பெரிய விஷயம் என்பது புரிய வேண்டாமா?


7) அர்ச்சாவ தாரத்தோடு எலும்பும் சதையுமுடைய பெண் எவ்வாறு கலக்கமுடியும் என்று அறிவுக்கேள்வி எழும்புமானால், இறைபணியிலும், கோயில் பணியிலும் காலம் கழித்து கரைந்து கலந்த திலகவதியார் போல, ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் வாழ்ந்திருக்க கூடும் என்று எழுதி இருந்தால் சமய உலகம் இவ்வளவு கொதிப்படைந்து இருக்காது.

8) உங்கள் வார்த்தை தேர்வில், வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம் வெளிப்படுவதாகவே பக்தர்கள் வருந்துகிறார்கள். குருதி, இறைச்சி என்ற சொற்களில் எந்தப் பிழையும் இல்லையென்றாலும் "உழினை உருக்கி" என்ற மணிவாசகரையும் "தசையினைத் தீ கடினும்" என்கிற பாரதியையும் நீங்கள் ஒருமுறை கூர்ந்து கவனிப்பது அவசியம்.

சமய உலகிற்கென்று மரபு இருக்கிறது. நீங்கள் நாத்திகராக அறியப்பட்டவர். அப்படி இருக்க, காயப்படுத்தும் வார்த்தைகளில் கவனம் காட்ட தவறியது ஏன்?

9) வைணவ குடும்பங்களில் ஒவ்வொரு பெற்றோரும் தம் மக்களை ஆண்டாளாக பாவித்து, ஆண்டாள் கொண்டை போட்டு, மாப்பிள்ளையை ரங்கமன்னராக்கி மணமுடித்து கொடுப்பதே வழக்கம். பெற்ற தகப்பன் பெரியாழ்வாராவது அந்த ஒரு கணம்.... ஒரே கணம். அந்த அழகான கனவை அசிங்கமான பதிவால் கலைத்து என்ன நன்மை பெறுகிறீர்கள்?

10) சாதிக் கட்டுமானம் காரணமாக ஆண்டாளை சமூகம் நிராகரிப்பு செய்திருக்கலாம் என்பது அபத்தமானக் கற்பனை. வீட்டுக்குள் வரவேற்காத சமூகம் கோயிலுக்குள் குடியேற்றி கொண்டாடி இருக்குமா என்ன?

கடவுளையே மணப்பேன் என்கிற ஆண்டாள் பெரிதினும் பெரிது கேள் என்கிற பாரதியின் முன்னோடி. சமூக நிராகரிப்பு என்ற வார்த்தைகளால் அவளது உச்சபட்ச உயரத்தைக் கொச்சைப்படுத்த வேண்டுமா என்ன?

நிவேதனம் கூட நூறு அண்டா வெண்ணெய், நூறு அண்டா சர்க்கரை பொங்கல் என்று பெரிதினும் பெரிது குறித்துப் பேசிய பெண் பிள்ளை, உள்ளூர் மாப்பிள்ளைகளை ஒதுக்கிவிட்டு, வைகுந்த வாசிக்கு வாழ்க்கைப் பட நினைத்ததே ஆண்டாளின் தனிச்சிறப்பு.

11) கட்டுரை முழுவதும் ஆண்டாளை வெளிப்படுத்தும் அக்கறையை விட, உங்கள் பரந்த புலமையை வெளிப்படுத்தும் வேகமே வெளிப்படுகிறது. நாத்திகராக இருப்பது உங்கள் சௌகர்யம். ஆனால், அதற்காக ஆண்டாளிடமிருந்து கடவுளைக் கழித்த பிறகு என்று கட்டுரையை முடித்திருக்க வேண்டாமே. இறை நிலையை ஆண்டாளிடம் இருந்து அழிக்கமுடியாது. அழித்தப் பின் ஆண்டாள் அங்கே இருக்க முடியாது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா வாங்கி வந்து, பால்கோவாவை எறிந்துவிட்டு, பிளாஸ்டிக் பையைச் சேகரிக்கும் முயற்சியை பைத்தியக்காரத்தனம் என்று சொல்லாமல், பாராட்டவா முடியும்?

நாத்திகர்களை திருப்திசெய்ய, ஆத்திகர்களை வலிக்கச்செய்வது விவேகமா கவிஞரே?


12) அத்துமீறலில் இத்தனை அத்துமீறலா?

இவ்வாறு கவிஞர் வைரமுத்துவை நோக்கி 12 கேள்விக் கணைகளைத் தொடுத்திருக்கிறார் சுகி சிவம்.

- சி.என்.இராமகிருஷ்ணன்

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran
Top
// // // // $find_pos = strpos(SERVER_PROTOCOL, "https"); $comUrlSeg = ($find_pos !== false ? "s" : ""); ?>