ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.
கந்தசாமி, அவர்கள் இன்று (02.07.2026) நேரில் ஆய்வு மேற்கொண்டார். கேசரிமங்கலம் ஊராட்சி பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் செயல்பட்டு வரும் மெத்தை, தலையணைகள் தயாரிக்கும் மற்றும் விற்பனை கூடத்தினை பார்வையிட்டு, மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்கள், அவற்றின் விலை மற்றும் தரம், தயாரிக்கும் முறைகள், சந்தைப்படுத்துதல், பிற மாநிலங்களுக்கு விற்பனை உள்ளிட்டவை குறித்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம், பழைய மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் அமைந்துள்ள ஆயத்த ஆடைகள் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஷாலினி கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிறுவனம் ரூ.23.44 இலட்சம் திட்ட மதிப்பீட்டில், நீண்டகாலக் கடனாக ரூ.22.26 இலட்சமும், தமிழ்நாடு அரசின் மானியமாக ரூ.5.85 இலட்சமும் பெற்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மூலம் 25 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும், அதே பகுதியில் அண்ணல் அம்பேத்கர் தொழில்முன்னோடிகள் திட்டத்தின் கீழ் வாடகை வாகனம் வாங்க ரூ.9.17 இலட்சம் திட்ட மதிப்பீட்டில், நீண்டகாலக் கடனாக ரூ.6.03 இலட்சமும், தமிழ்நாடு அரசின் மானியமாக ரூ.3.196 இலட்சமும் பெற்ற பயனாளியிடம், வாடகை வருமானம் மற்றும் பெற்ற கடனுக்கான மாதத் தவணையை முறையாக செலுத்தி வருகிறாரா என்பது குறித்து கேட்டறிந்தார்.
அம்மாப்பேட்டை பேரூராட்சி மற்றும் வெள்ளித்திருப்பூர் கிராம நிர்வாக அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும், அங்கிருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். அதே பகுதியில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, மின்சாரப் பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து, பணிகளை உரிய காலத்திற்குள் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஊமரெட்டியூர், வெள்ளித்திருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு, அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரம், குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை மற்றும் பயோமெட்ரிக் முறை குறித்து பணியாளரிடம் கேட்டறிந்தார். மேலும், பூனாச்சி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் தமிழ்நாடு நீர்வளத் திட்டத்தின் கீழ் ரூ.40,000 மானிய விலையில் விவசாயிக்கு வழங்கப்பட்ட விதை எடுக்கும் கருவியை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
பட்லூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை பார்வையிட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள், பராமரிக்கப்படும் பதிவேடுகள், வாசகர்களின் எண்ணிக்கை மற்றும் தேவைப்படும் புத்தகங்கள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச. கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் வெள்ளித்திருப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். மேலும், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவை சாப்பிட்டு பார்த்து, உணவின் சுவை மற்றும் உணவுப் பட்டியலின்படி வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளின் உயரம், எடை மற்றும் வழங்கப்படும் இணை உணவு குறித்து கேட்டறிந்தார். வெள்ளித்திருப்பூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டு, செடிகளின் வகைகள், வளர்ச்சி, விநியோகம் மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட தொழில்மையத் திட்ட மேலாளர் திருமுருகன், உதவி இயக்குநர் (வேளாண்மை) பவானி, அம்மாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், இந்திராணி உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

