Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வண்டல் மண் போர்வையில் மணல் கொ*ள்ளை? : கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

வண்டல் மண் போர்வையில் மணல் கொ*ள்ளை? : கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

டலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே அரங்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ராசாகுப்பம் கிராமத்தில் உள்ள பழமையான பணமட்டை ஏரியில், வண்டல் மண் எடுப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியைப் பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்படுவதாகவும், இதனைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராசாகுப்பம் கிராமத்தில் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி, அப்பகுதி விவசாயிகளின் பாசனத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. மேலும், கால்நடைகளுக்கான நீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் இந்த ஏரி முக்கிய பங்கு வகித்து வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏரிகளில் வண்டல் மண்ணை எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்கும் வகையில் அரசு குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த அனுமதியைச் சிலர் தவறாகப் பயன்படுத்தி ஏரியில் இருந்து அளவுக்கு அதிகமாக மணல் எடுத்து விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஏரியில் சில இடங்களில் 10 அடிக்கும் மேல் ஆழமாக மணல் எடுக்கப்படுவதாகவும், மணல் அதிகம் உள்ள பகுதிகளில் மேலும் ஆழமாகத் தோண்டப்படுவதால் மழைக்காலங்களில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'இரவு, பகல் பாராமல் 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஏரியில் இருந்து மண் எடுத்துச் செல்கின்றன. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒரு நாளைக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

டிராக்டர்கள் அதிக சத்தத்துடன் வேகமாகச் செல்வதால் பள்ளி மாணவ, மாணவிகள் முதியவர்கள், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். தொடர்ந்து கனரக வாகனங்கள் செல்வதால் சாலைகளும் சேதமடைந்து வருகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், தொடர்ந்து மண் எடுத்துச் செல்லும் பணி நடைபெற்று வருகிறது' என்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஏரியில் ஆய்வு மேற்கொண்டு கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதுகுறித்து தகவல் அறிய குறிஞ்சிபாடி வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் தொலைப்பேசியை எடுக்க மறுத்து விட்டனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran