Dailyhunt
வேட்புமனுக்கள் பரிசீலனை : ஏற்பு.... நிறுத்திவைப்பு.... நிராகரிப்பு எனப் பரபரக்கும் தேர்தல் களம்!

வேட்புமனுக்கள் பரிசீலனை : ஏற்பு.... நிறுத்திவைப்பு.... நிராகரிப்பு எனப் பரபரக்கும் தேர்தல் களம்!

மிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்று (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இத்தகைய சூலில் தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7 ஆயிரத்து 600 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் 9ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியாக உள்ளது. இத்தகைய சூழலில் தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் இன்று (07.04.2026) பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. இதன் மூலம் கொளத்தூர் தொகுதியில் 4 வது முறையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டியிட உள்ளார். அதே போன்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது. அதே சமயம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது படத்தயாரிப்பு நிறுவனங்களில் உள்ள பங்கை உதயநிதி ஸ்டாலின் மறைத்ததாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோப்புப்படம்

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய்யின் வேட்பு மனு ஆவணங்களில் கையொப்பமிட்ட நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் போலியானவர் என தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பாமகவினர் முறையிட்டனர். அதற்கு பதலடியாக நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் சான்றிதழை த.வெ.க. வழக்கறிஞர்கள் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்ததால் விஜய்யின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. முன்னதாக நோட்டரி பப்ளிக் போலியானவர் என்றால் அதற்கான ஆவணங்களை பா.ம.க.வினர் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரி கூறியதற்கு ஆவணங்களை எடுத்து வருகிறோம் என பாமகவினர் கூறினர். இதனையடுத்து ஆவணங்களை எடுத்து வாருங்கள், அதன்பிறகு பார்க்கலாம் எனக் கூறி தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டார்.

அதே சமயம் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு திமுகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது விஜய் சொத்து மதிப்பை தவறாக காட்டியுள்ளதாக திமுகவினர் குற்றம்சாட்ட்டினர். மேலும் சொத்து வரியை விஜய் செலுத்தவில்லை என பாமகவினர் ஆட்சேபனை தெரிவித்ததால் பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம் திருச்சி கிழக்கு தொகுதியில் ப்போட்டியிடும் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டது;

கோப்புப்படம்

வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனு நிறுத்தி வைப்பு வைக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் போட்டியிடும் முரளி வினோத் என்கின்ற சுயேச்சை வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக கூறி, அவரது மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆதவ் அர்ஜுனாவின் வைப்பு நிதியில் உள்ள ரூ.2 கோடிக்கு ரூ.84 லட்சம் வரை வட்டி வருவதை, அவர் வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

எனவே தேர்தல் கண்காணிப்பாளர் விக்ரம் குமார் சிங் வந்தவுடன் இது குறித்து முடிவு செய்யப்படும் என தேர்தல் அலுவலர்கள் கூறியுள்ளனர். மேலும் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தேவராஜன் என்கிற மற்றொரு சுயேச்சை வேட்பாளரும் ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனுவிற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் புண்ணியவதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran