Dailyhunt
வேட்புமனுத் தாக்கல் : தி.மு.க. - அ.தி.மு.க.வினர் இடையே மோதல்!

வேட்புமனுத் தாக்கல் : தி.மு.க. - அ.தி.மு.க.வினர் இடையே மோதல்!

மிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், இன்றுடன் (06.04.2026) நிறைவு பெறவுள்ளது. இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதற்கிடையே சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தான் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கணேசன் என்பவர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்ய விஜய பிரபாகரன், அமைச்சர் தங்கம் தென்னரசுடன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே வரை வருவதற்கான அனுமதி ஏற்கனவே பெற்றிருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் அனுமதிக்கப்பட்ட தூரமான 100 மீட்டரையும் தாண்டியும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது. அப்போது அங்கு ஏற்கனவே கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அமைச்சருடைய கார் மட்டும் எவ்வாறு உள்ளே வருவதற்கு அனுமதி கொடுத்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் திமுக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இத்தகைய சூழலில் தான் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதையடுத்து, அங்கிருந்த காவல்துறையினர் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மோதலால் சிறிது நேரம் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran