Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வெளிநாட்டில் மகள் காதல் திருமணம்; விசா கிடைக்காத பரிதவிப்பில் பெற்றோர்

வெளிநாட்டில் மகள் காதல் திருமணம்; விசா கிடைக்காத பரிதவிப்பில் பெற்றோர்

தெலுங்கானா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள வேப்பல சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ் - ஜோதி தம்பதியினர்.

இவர்களது மகள் ஹீமா பிந்து அமெரிக்காவில் எம்.எஸ் படித்துவிட்டு அங்கேயே ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே போல, ஆந்திர மாநிலம், என்.டி.ஆர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மஸ்தான் ராவ்-ரமா தம்பதியினர். இவர்களது மகன் ரோஹித் என்பவரும் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து, இவர்கள் திருமணம் செய்துகொள்ளப் பெற்றோர்களிடமும் சம்மதம் பெற்றனர். இதனையொட்டி, இவர்களுக்குத் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. அவர்களது திருமணமும் அமெரிக்காவில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், திருமணத்தின் போது மணமகளின் பெற்றோர்களுக்கு விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், அவர்கள் அமெரிக்காவிற்குச் சென்று திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இதனால், தங்களின் ஒரே மகளின் திருமணத்திற்கு, நேரில் செல்ல முடியாத சூழ்நிலையால் அவர்கள் மனம் நொந்துபோயினர். இந்நிலையில், அவர்கள் மகளின் திருமணத்தை வீடியோ கால் (அழைப்பு) மூலமாகக் கண்டு வாழ்த்தினர். இந்த திருமண நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிப்பரப்பட்டதைத் தொடர்ந்து, அந்த கிராமத்தில் இருந்தவர்களும் இந்த திருமணத்தைக் கண்டு வாழ்த்தினர். இதனிடையே, இந்த திருமணத்தை நேரலையில் கண்டு பெற்றோர்கள் திரையின் மீது மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், அந்த கிராமத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பெற்றோர்கள் திருமண விருந்தும் ஏற்பாடு செய்திருந்தனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran