ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் மறுநாள் முழுவதும் ஜவுளிச் சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.
ஜவுளி உற்பத்தியாளர்கள் நேரடியாக வந்து கடைகள் அமைப்பதாலும், மொத்தமாக கொள்முதல் செய்யும் ஜவுளிகள் குறைந்த விலையில் கிடைப்பதாலும் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உட்பட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஜவுளியை கொள்முதல் செய்கின்றனர்.
இந்நிலையில் ஈரோடு சென்ட்ரல் தியேட்டர் பகுதி, ஸ்டேட் வங்கி ரோடு, காந்திஜிரோடு உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவில் ஜவுளிச்சந்தை நடந்தது. விடிய, விடிய நடந்த சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் வந்து ஜவுளியை ஆர்வமாக வாங்கி சென்றனர். வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவாக காணப்பட்டதால் ஜவுளிச்சந்தை வெறிச்சோடியது.இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறுகையில், 'கோடை விடுமுறைக்கு பிறகு இருந்தே ஜவுளி விற்பனை மந்தமாக காணப்படுகிறது. மேலும், ஜவுளி கொள்முதல் செய்வதற்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைந்தது. அதேசமயம் ஆடி மாதத்தை முன்னிட்டு கோயில் விழாக்கள் நடைபெற உள்ளதால், மஞ்சள் நிற சேலைகள், காவி நிற வேட்டிகள் போன்ற ஆன்மிகம் தொடர்பான வேட்டி, சேலை, துண்டுகள் விற்பனை பரவலாக காணப்படுகிறது' என்றனர்

