Dailyhunt
"விஜய் ஆட்சி அமைப்பதில் இடையூறு செய்ய மாட்டோம்" - மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

"விஜய் ஆட்சி அமைப்பதில் இடையூறு செய்ய மாட்டோம்" - மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

மிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 5 வருட திமுக ஆட்சியை வீழ்த்தி, 108 இடங்கள் வென்று விஜய்யின் தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.

ஆனால், 234 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை எனும் பட்சத்தில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது.

அதே சமயம் தவெக அதிக இடங்களை வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை என்பதால் மற்ற கட்சிகளுடன் தவெக ஆதரவு கோரி ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆட்சி அமைக்க தங்களை ஆதரிக்குமாறு விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தவெக சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இதனையடுத்து தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து, தவெக பெற்ற 108 மற்றும் காங்கிரஸ் 5 எம்.எல்.ஏக்கள் என 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் தவெக தலைவர் இன்று சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனுக்குச் சென்று பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஆனால், 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை விஜய் தராததால், ஆட்சி அமைக்க உரிமைகோரி அளித்த கோரிக்கையில் ஆளுநருக்குத் திருப்தி இல்லை. அதனால் தவெக ஆட்சியமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுவிக்கவில்லை. இதனால், இன்று நடக்கவிருந்த பதவியேற்பு விழா ரத்தாகியுள்ளதாகக் கூறப்பட்டது. தவெக ஆட்சியமைக்க இன்னும் சிக்கல் எழுந்துள்ள நிலையில், திமுகவும், அதிமுகவும் இணைந்து கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக எதிர் எதிராக நின்று அரசியல் செய்து வரும் திமுக, அதிமுக தற்போது இணைந்து ஆட்சி அமைக்க மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவலால் தமிழகத்தில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தகவல் குறித்து தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர்வமாக தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், தவெக ஆட்சி அமைப்பதற்கு திமுக இடையூறு செய்யாது என முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், 'தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கும் வரை, காத்திருந்து 6 மாதங்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல் இருப்போம். அரசியலமைப்பு நெருக்கடியையோ அல்லது உடனடியாக மற்றொரு தேர்தல் வருவதையோ திமுக விரும்பவில்லை. புதிய அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டத்தைத் தொடர வேண்டும். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடர வேண்டும். பெண்களுக்கு ரூ.2,500 தருவதாக அவர் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது கடினம். நாங்கள் செய்தது போல் குறைந்தபட்சம் பெண்களுக்கு ரூ.1,000 கொடுக்க வேண்டும்.

2021இல் நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம். நீட் தேர்வை நிறுத்துவது போன்ற சில வாக்குறுதிகளை மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாகச் செய்ய முடியவில்லை. இந்தத் தேர்தலிலும், எங்களால் நிறைவேற்ற முடிந்தவற்றை மட்டுமே வாக்குறுதியளித்தோம். ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஆறு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று தவெக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று நான் நினைக்கவில்லை, செய்தால் மகிழ்ச்சிதான்' என்று கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran