Dailyhunt
விஜய்க்கு அளிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வாபஸ்?; உச்சக்கட்ட பரபரப்பில் தமிழ்நாடு!

விஜய்க்கு அளிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வாபஸ்?; உச்சக்கட்ட பரபரப்பில் தமிழ்நாடு!

மிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.

ஆனால், 234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 தேவை எனும் பட்சத்தில், இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது. இதனிடையே ஆட்சி அமைக்க சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை தவெக நாடியுள்ளது. இது தொடர்பான கடிதத்தையும் விஜய், அந்த கட்சிகளுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், விஜய்க்கு ஆதரவு தருவது குறித்து 3 கட்சிகளும் தீவிர பரிசீலனையில் உள்ளது.

இதற்கிடையில், தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. அதாவது எந்தவொரு வகுப்புவாத சக்திகளையும் இந்தக் கூட்டணியிலிருந்து தவெக விலக்கி வைக்க வேண்டும் என்றும், எதிர்வரும் உள்ளாட்சி, மக்களவை மற்றும் மாநிலங்களவை போன்ற தேர்தல்களுக்கும் கூட்டணி தொடர வேண்டும் என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. அதன்படி, தவெக 108 எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தோடு தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுக்காததால் விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்காமல் உள்ளார். இதனால், விஜய் ஆட்சியமைக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நிச்சயமற்ற அரசியல் சூழலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜய்க்கு அளிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாக்கு எண்ணிக்கை நாளின் போது விஜய் அதிக இடங்களை வென்றதை அடுத்து, அன்றைய தினமே முதல்வருக்கு அளிக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு வளையம் விஜய்க்கு அளிக்கப்பட்டிருந்தது. கடந்த 3 நாட்களாக முதல்வருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு வளையத்துடன், முதல்வர் கான்வாயில் தான் விஜய் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு பாதுகாப்பு வாகனங்கள் இன்றி தவெக தலைவர் விஜய் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனால் விஜய்க்கு அளிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, விஜய் தானாகவே முன் வந்து பாதுகாப்பு வாகனங்களை திருப்பி அனுப்பியதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran