Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விசிக நிர்வாகி கொ*லை சம்பவம்; போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்!

விசிக நிர்வாகி கொ*லை சம்பவம்; போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்!

சென்னை தாம்பரம் அடுத்த திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளராக பதவி வகித்து வந்தார்.

இந்த சூழலில், இவர் திருநீர்மலை அம்பேத்கர் சிலை அருகே உள்ள திமுக மண்டல அலுவலகம் அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, 3 இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அன்பழகனை சரமாரியாக வெட்டி அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளது.

இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர், அன்பழகன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த அன்பழகனின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

படுகொலை செய்யப்பட்ட அன்பழகன் என்ற மைனா குட்டி மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. முதற்கட்ட காவல்துறை விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், தப்பிச் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் குற்றவாளிகளி பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருநீர்மலை அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார், அங்கிருந்த 7 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 2021இல் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில், வீனஸ் என்கிற குமரவேல் என்பவரை அன்பழகன் சேர்த்துள்ளார். குற்றவாளி இல்லாத போதும் தன்னை இந்த வழக்கில் சேர்த்ததால் அன்பழகனை பழிவாங்கும் எண்ணத்தில் வீனஸ் இருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல், இருவருக்கும் இடையே அடிக்கடி தொழில் போட்டியும் இருந்துள்ளது. அன்பழகன் மீது ஏற்கெனவே இருந்த முன்பகை காரணமாக வீனஸ் தலைமையில் 7 பேர் கொண்ட கும்பல் அவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran