மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், ராஜஸ்தானில் உள்ள காட்டு ஷியாம் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றிருந்தனர்.
அதன்படி தரிசனத்தை முடித்துவிட்டு அவர்கள் சொந்த ஊரான மகாராஷ்டிராவிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு நேரத்தில் சம்புபுரா அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்பகுதியில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தின் முன்பகுதி முழுமையாக நொறுங்கியது.
இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து கோட்டா கூடுதல் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறுகையில், "சம்புபுரா அருகே நள்ளிரவில் 16 பேரை ஏற்றிச் சென்ற வாகனம் லாரி மீது மோதியது. இது மிகவும் துயரமான மற்றும் நெஞ்சை உலுக்கும் விபத்தாகும். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் காட்டு ஷியாம் கோயிலுக்குச் சென்றுவிட்டு மகாராஷ்டிராவிற்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள். காயமடைந்தவர்களுக்கு உயர்தர மற்றும் முறையான மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்களைக் குணமடையச் செய்வதே எங்களது தற்போதைய முதன்மைப் பணியாகும். உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன," எனத் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கிய குழுவில் பயணித்த ஒருவர் இது குறித்துப் பேசுகையில், "நாங்கள் காட்டு ஷியாமிலிருந்து தார் நோக்கி மொத்தம் 5 வாகனங்களில் பயணித்துக் கொண்டிருந்தோம். வழியில் எங்களது இரண்டு வாகனங்கள் சற்றுப் பின்தங்கிவிட்டன; மற்ற மூன்று வாகனங்கள் முன்னால் சென்று கொண்டிருந்தன. அந்த நேரத்தில், முன்னால் சென்ற எங்கள் குழுவைச் சேர்ந்த பெண்மணி ஒருவரிடமிருந்து விபத்து நேர்ந்துவிட்டதாகப் பதற்றத்துடன் தொலைபேசி அழைப்பு வந்தது. இதையடுத்து நாங்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தோம்," என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

