தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன.
இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் தர்மபுரி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக, பாமக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் அவர் பேசுகையில், ''தர்மபுரி மாவட்டம் அதிமுகவின் கோட்டை. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாக ஸ்டாலின் வடிகட்டிய பொய் பேசிக் கொண்டிருக்கிறார். இங்குதான் 6000 இருக்கும் அதிகமான போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சாதாரண வடிகட்டல் அல்ல ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை பேசிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் பாலியல் சீண்டலில் இல்லையமாம்? தினந்தோறும் பத்திரிகையைத் திறந்தால் பாலியல் தொல்லைகள் குறித்த செய்திகள் தான் வருகிறது இந்த வெட்கம் கெட்ட திமுக ஆட்சியில்.
ஸ்டாலின் ஈரோட்டில் பேசுகிறார் 'எடப்பாடி பழனிச்சாமி வேண்டும் என்று பாலியல் சம்பவங்கள் அதிகமாக தமிழகத்தில் இருப்பதாக பேசி வருகிறார்' என்று ஒரு குற்றச்சாட்டைச் சொல்கிறார். இது உண்மையா? திமுக அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிவர அடிப்படையில் தான் நான் சொல்லி வருகிறேன். ஸ்டாலின் அவர்களே பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்வத்தில் உடனடியாக நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்கு சிபிஐக்கு உத்தரவிட்ட அரசு அதிமுக அரசாங்கம். உங்கள் அரசாங்கத்தைப் போல கேடுகெட்ட அரசாங்கம் அல்ல.
அண்ணாநகரில் சிறுமி பாதிக்கப்பட்ட சம்பவத்தில், நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து இன்றைக்கு உச்சநீதிமன்றத்தை நாடிய அரசாங்கம் திமுக அரசாங்கம். யாரைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் உச்சநீதிமன்றத்திற்கு போகிறீர்கள். உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்த பிறகு அந்த தீர்ப்பின் அடிப்படையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டால் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விடுவார்கள். அந்த சிறுமியை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய குற்றவாளியை காப்பாற்றுகின்ற அரசு தேவையா? அதேபோல அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் யார் அந்த சார்? அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் யார் அந்த சார் என்பது கண்டுபிடிக்கப்படுவார். சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார். தண்டனை பெற்றுத் தரப்படும்'' என்றார்.

