தென் அமெரிக்க நாடான பெருவில் சனிக்கிழமை (ஜூலை-18) இரவு அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
பெருவின் தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, தலைநகர் லிமாவிலிருந்து கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் முறையே 5.1 மற்றும் 3.7 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் 24 கிலோமீட்டர் ஆழத்திலும், அதைத் தொடர்ந்து இரண்டாவது நிலநடுக்கம் 18 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் 66 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் அவசரக்கால தங்குமிடங்களையும் கூடாரங்களையும் அமைத்து வருகின்றனர்.
இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில் தேடுதல் பணிகள் தொடர்ந்து வருகின்றன. அதேவேளையில், இடிபாடுகளை அகற்றுவதற்காக அவசரக்கால மீட்புக் குழுவினரும் தீயணைப்பு வீரர்களும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே அப்பகுதிக்குச் சென்றனர்.
பெருவில் ஏன் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன…?
பெரு உலகின் நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாகும். இது 'பசிபிக் நெருப்பு வளையம்' (Pacific Ring of Fire) எனப்படும் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் உலகின் நிலநடுக்கங்களில் கிட்டத்தட்ட 85 சதவீதத்திற்கு இப்பகுதியே காரணமாக உள்ளது.
தனது புவியியல் அமைவிடத்தின் காரணமாக, பெருவில் சிறிய அதிர்வுகள் முதல் பரவலான சேதம் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் வரை அவ்வப்போது ஏற்படுகின்றன.

