Dailyhunt
பிஎம் ஸ்ரீ திட்டம் - தமிழ் நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்.!

பிஎம் ஸ்ரீ திட்டம் - தமிழ் நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்.!

News7 Tamil 3 days ago

தேசிய கல்விக்கொள்கை 2020-ன் கீழ், பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா (PM SHRI) திட்டம் கொண்டு வரப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள 14,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்துதல், மாணவர்களுக்கு நவீனத் தொழில்நுட்பம், ஆய்வகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய தரமான கல்வியை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்திற்கான நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்கும். பெரும்பாலான மாநிலங்கள் இதில் இணைந்துவிட்டன. ஆனால் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

அப்போதிருந்த திமுக அரசு இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தது. இத்திட்டத்தில் மும்மொழிப் பாடத்திட்டம் போன்ற மாநில உரிமைகளுக்கு எதிரான அம்சங்கள் இருப்பதாக குற்றம் சாட்டியது. தமிழ் நாட்டை போல மேற்கு வங்க மாநில அரசும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் 'பிஎம் ஸ்ரீ' (PM SHRI) திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐந்த மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழ் நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜக தலைமையிலான அரசும் தமிழ் நாட்டில் தவெக தலைமையிலான அரசும் அமைய உள்ளன. முந்தைய அரசுகள் எதிர்த்த இந்த திட்டத்தை புதிதாக அமைய உள்ள அரசுகள் ஏற்பார்களா அல்லது எதிர்ப்பார்களா என்கிற கேள்வு எழுந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil