கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா காவிரி ஆற்றில் இருந்து 15 நாட்களுக்கு 3500 டிஎம்சி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால கர்நாடக முதலமைச்சர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனிடையே காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நில்லையில் காவிரியில் உடனடியாக தமிழ்நாட்டிற்கு நீரை திறந்து விடக் கோரியும் கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தவறாமல் அமல்படுத்த கோரியும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, 'காவிரியில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரின் அளவை உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ள நிலையில் தமிழகத்திற்கான நீர் மறுக்கப்பட்டுள்ளது. காவிரியில் நீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்த நிலையிலும் அதனை அமல்படுத்த கர்நாடக தவறி உள்ளது. குறிப்பாக 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டிருந்த நிலையில் கர்நாடகம் அந்த உத்தரவை செயல்படுத்த தவறிவிட்டது.
இதனால் காவிரி டெல்டா பகுதியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் கடந்த ஜூலை 26 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாடு வழங்கப்பட வேண்டியது 9.46 டிஎம்சி நீராகும். எனவே நீர் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் அடுத்த 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 7000 கன அடி வீதம் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும்' இவ்வாறு திமுக தாக்கல் செய்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

