Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் பாடல்.. 'வருவாய்'!

கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் பாடல்.. 'வருவாய்'!

News7 Tamil 1 day ago

சென்னையைச் சேர்ந்த இசையமைப்பாளரும் பாடகருமான தேவன் ஏகாம்பரம் மற்றும் பாடகி சுபிக்‌ஷா ரங்கராஜன் என்கிற சுஷா இணைந்து உருவாக்கிய பாடல் 'வருவாய்'.

மகாகவி பாரதியாரின் பக்திப் பாடலை அடிப்படையாகக் கொண்டு, நவீன இசை வடிவில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள 69-வது கிராமி விருதுகளில், 'Best Global Music Performance' பிரிவில் இந்தப் பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2027 கிராமி விருதுகளில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே பரிந்துரையாகவும் 'வருவாய்' பாடல் அமைந்துள்ளது.

இண்டிபெண்டன்ட் கலைஞருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

சுமார் 30 ஆண்டுகளாக இசைத்துறையில் பயணித்து வரும் தேவன் ஏகாம்பரம், இந்த அங்கீகாரம் தனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 526 பாடல்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், பல முன்னணி இசைக் கலைஞர்களின் படைப்புகளுடன் போட்டியிட வேண்டியிருந்தது. எந்தவொரு இசை நிறுவனத்தின் ஆதரவும் இல்லாமல், சுயாதீனக் கலைஞராகத் தானே இந்தப் பாடலை வெளியிட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் பாடல் என்ற பெருமையே இதில் மிகப்பெரிய சிறப்பம்சம் என்றும், இந்த அங்கீகாரத்தைத் தன்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்க்காத நேரத்தில் கிடைத்த மகிழ்ச்சி - சுஷா!

இந்த அங்கீகாரம் குறித்து பாடகி சுஷா கூறுகையில், தேவனுக்காகவே தான் இந்தப் பாடலைப் பாடியதாகவும், பாடலை உருவாக்குவது முதல் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்க அனுப்புவது மற்றும் அதற்கான விளம்பரப் பணிகளை மேற்கொள்வது வரை அனைத்தையும் தேவனே முன்னின்று செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பரிந்துரைப் பட்டியல் வெளியான நாளன்று நாள் முழுவதும் ஸ்டுடியோவில் இருந்ததாகவும், தனது செல்போனை அணைத்து வைத்திருந்ததால் அது கிராமி விருது அறிவிப்பு நாள் என்பதையே மறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். பின்னர் செல்போனை இயக்கியபோது, தேவன் தன்னைத் தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்திருந்ததும், ஏராளமான குறுஞ்செய்திகள் வந்திருந்ததும் தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ரூ.18.70 லட்சம் செலவில்லாமல் கிடைத்த பரிந்துரை!

கிராமி விருதுக்கான பரிந்துரையை ஒரு லாட்டரி சீட்டு கிடைத்ததற்கு இணையாகப் பார்ப்பதாக தேவன் தெரிவித்துள்ளார். மேலும், கிராமி விருதுக்கான பரிந்துரையைப் பெற குறைந்தபட்சம் 20,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18.70 லட்சம்) விளம்பரத்திற்காகச் செலவிட வேண்டும் என்று தன்னிடம் கூறப்பட்டதாகவும், ஆனால் தான் அதுபோன்ற எந்தச் செலவையும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் மூலமாக மட்டுமே தனது பாடலை விளம்பரப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் 30 ஆண்டுகளாக இசைத்துறையில் இருக்கும் தனக்கு, கிராமி விருதுப் பரிந்துரைப் பட்டியலில் தனது பெயரைப் பார்ப்பது நம்ப முடியாத மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இந்த வாய்ப்பை ஏற்படுத்திய பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

உலக அரங்கில் தமிழ் மொழிக்கும் பாரதியாருக்கும் பெருமை!

கிராமி விருது விழாவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிவித்த தேவன், இந்த ஆண்டு இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கலைஞராக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் இந்திய வாக்காளர்கள் தனக்கு ஆதரவு அளிப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் வகையில் தன்னால் ஏதோ ஒரு பங்களிப்பைச் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி என்றும், கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் பாடலை உருவாக்கிய கலைஞர் என்ற பெருமை தனக்குக் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, பாடகி சுஷா பேசுகையில், தமிழ் தனது தாய்மொழி என்பதால், தனது தாய்மொழியில் பாடிய ஒரு படைப்பு கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது மிகுந்த பெருமை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழ், கர்நாடக இசை மற்றும் தமிழர்களால் பெரிதும் போற்றப்படும் பாரதியாரின் கவிதையை, தேவனின் மேற்கத்திய இசை வடிவமைப்பின் மூலம் உலக அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்துவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil