இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவாவில் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழாவில் 137 நாடுகளில் இருந்து 1,900-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
இதில் 150-க்கும் அதிகமான சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த விழாவின் இயக்குநராக திரைப்பட இயக்குநர் அசுதோஷ் கோவாரிகர் செயல்படுகிறார்.
3 முக்கிய திரைப்பட விழாக்களின் 14 விருது படங்கள்!
இந்த ஆண்டு கேன்ஸ், பெர்லின், வெனிஸ் திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற 14 திரைப்படங்கள் IFFI பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில் கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற 7 படங்களும், பெர்லின் திரைப்பட விழாவில் விருது பெற்ற 3 படங்களும், வெனிஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற 4 படங்களும் அடங்கும். வெனிஸ் திரைப்பட விழாவில் உயரிய விருதான கோல்டன் லயன் (Golden Lion) விருதை வென்ற மே எல்-டூகியின் (May el-Toukhy) 'Woman Unknown' திரைப்படமும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அதேபோல், கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்ற பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியின் (Paweł Pawlikowski) 'Fatherland' திரைப்படம் IFFI விழாவின் தொடக்கப் படமாகத் திரையிடப்பட உள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற 7 படங்கள்!
கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு விருது பெற்ற 7 திரைப்படங்கள் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன.
'Fatherland' படத்துக்காக பாவெல் பாவ்லிகோவ்ஸ்கி சிறந்த இயக்குநர் விருதைப் பகிர்ந்து கொண்டார். வலேஸ்கா கிரைஸ்பாக்கின் (Valeska Grisebach) 'The Dreamed Adventure' திரைப்படம் நடுவர் குழு விருதைப் பெற்றது.
லூகாஸ் தோன்ட்டின் (Lukas Dhont) 'Coward' திரைப்படத்தில் நடித்த இரண்டு இளம் நடிகர்களும் சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், கேன்ஸ் திரைப்பட விழாவின் Un Certain Regard பிரிவில் விருது பெற்ற நான்கு படங்களும் இடம்பெற்றுள்ளன. சாண்ட்ரா வோல்னரின் 'Everytime' திரைப்படம் அந்தப் பிரிவின் உயரிய விருதைப் பெற்றது.
அபினாஷ் பிக்ரம் ஷாவின் 'Elephants in the Fog' திரைப்படம் அந்தப் பிரிவில் இடம்பெற்ற முதல் நேபாளத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றதுடன், நடுவர் குழு விருதையும் வென்றது. வாலண்டினா மௌரலின் 'Forever Your Maternal Animal' மற்றும் ரஃபிகி ஃபரியாலாவின் 'Congo Boy' ஆகிய படங்கள் நடிப்பு விருதுகளைப் பெற்றன.
பெர்லின் திரைப்பட விழாவின் 3 விருது படங்கள்!
பெர்லின் திரைப்பட விழாவில் விருது பெற்ற மூன்று திரைப்படங்களும் IFFI பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
எமின் அல்பரின் (Emin Alper) 'Salvation' திரைப்படம் Silver Bear Grand Jury Prize விருதையும், லான்ஸ் ஹேமரின் (Lance Hammer) 'Queen at Sea' திரைப்படம் Silver Bear Jury Prize விருதையும் வென்றன.
கிராண்ட் கீயின் (Grant Gee) 'Everybody Digs Bill Evans' திரைப்படம் சிறந்த இயக்குநருக்கான Silver Bear விருதைப் பெற்றது.
வெனிஸ் திரைப்பட விழாவின் முக்கிய படங்கள்!
வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லயன் விருதை வென்ற 'Woman Unknown' திரைப்படம் இந்த விழாவின் முக்கியப் படங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
அன் சிரோட் மற்றும் ரஃபேல் பால்போனியின் 'Diane in the Loop' திரைப்படம் Orizzonti பிரிவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.
மேலும், செட்ரிக் கானின் 'A Place to Heal' திரைப்படத்தில் நடித்த மலூ கெபிசி, சிறந்த வளர்ந்து வரும் திறமைக்கான மார்செல்லோ மாஸ்ட்ரோயானி விருதைப் பெற்றார்.
அலினா செர்பானின் 'I Matter' திரைப்படம் பார்வையாளர்கள் விருதை வென்றுள்ளது. இந்தப் படம் IFFI விழாவின் இடைப்பட்ட காலத் திரைப்படமாகத் திரையிடப்பட உள்ளது. ஹிரோகாசு கொரீ-எடாவின் 'Look Back' திரைப்படமும் வெனிஸ் திரைப்பட விழாவில் சுயாதீன நடுவர் குழுக்களின் விருதுகளைப் பெற்ற நிலையில், IFFI பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
கோல்டன் பீகாக் போட்டியில் இடம்பெறும் படங்கள்!
IFFI விழாவின் உயரிய விருதான கோல்டன் பீகாக் (Golden Peacock) விருதுக்காக 12 சர்வதேசத் திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.
ஜெர்மனியின் மூத்த இயக்குநர் வோல்கர் ஷ்லோண்டார்ஃப்பின் 'Visitation', ஜப்பானின் ஹரடா மஹாவின் 'In My Father's Room', சிலியின் மனுவேலா மார்டெல்லியின் 'The Meltdown', ஸ்பெயினின் டேனியல் மான்சோனின் 'Pray for Us' உள்ளிட்ட படங்கள் இந்தப் போட்டியில் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், இந்த 12 படங்களில் கேன்ஸ், பெர்லின், வெனிஸ் திரைப்பட விழாக்களில் இந்த ஆண்டு முக்கிய விருதுகளை வென்ற திரைப்படங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற IFFI விழாவில் கேன்ஸ் பாம் டி'ஓர் விருது வென்ற 'It Was Just An Accident', வெனிஸ் கோல்டன் லயன் விருது வென்ற 'Father Mother Sister Brother', பெர்லின் கோல்டன் பியர் விருது வென்ற 'Dreams (Sex Love)' ஆகிய படங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், பெர்லின் திரைப்பட விழாவில் Silver Bear Grand Jury Prize வென்ற 'The Blue Trail' தொடக்கப் படமாகத் திரையிடப்பட்டது.
பிரபல இயக்குநர்களின் புதிய படங்களும் இடம்பெறுகின்றன!
இந்த ஆண்டு IFFI விழாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல இயக்குநர்களின் புதிய படங்களும் திரையிடப்பட உள்ளன.
பெட்ரோ அல்மோடோவரின் 'Bitter Christmas' திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்ட படமாகும். ஸ்பெயின் நாட்டின் சிறப்பு நிகழ்ச்சிப் பிரிவில் இடம்பெற்றுள்ள நான்கு படங்களில் இதுவும் ஒன்று.
ஜப்பானிய இயக்குநர் கியோஷி குரோசாவாவின் 'The Samurai and the Prisoner' திரைப்படமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
தென் கொரிய இயக்குநர் ஹாங் சாங்-சூவின் 'Nowhere to Lay My Eyes', தைவான் இயக்குநர் சாய் மிங்-லியாங்கின் 'Dust' என்ற ஆவணப்படம், ஜெர்மன் இயக்குநர் விம் வெண்டர்ஸின் சுவிஸ் கட்டிடக் கலைஞர் பீட்டர் சும்தோர் குறித்த ஆவணப்படம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
பிரெஞ்சு இயக்குநர் குவென்டின் டுபியூக்ஸின் 'Full Phil' திரைப்படமும் திரையிடப்பட உள்ளது. சிங்கப்பூர் இயக்குநர் அந்தோணி சென்னின் 'We Are All Strangers' திரைப்படம் நிறைவு நாளில் திரையிடப்படும் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய விருது வென்ற பல படங்கள் இடம்பெறாதது ஏன்?
இந்த ஆண்டு சர்வதேச அளவில் முக்கிய விருதுகளை வென்ற சில திரைப்படங்கள் IFFI பட்டியலில் இடம்பெறாதது கவனத்தை ஈர்த்துள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம் டி'ஓர் விருதை வென்ற கிறிஸ்டியன் முங்கியுவின் 'Fjord', பெர்லின் திரைப்பட விழாவில் கோல்டன் பியர் விருதை வென்ற இல்கர் சாடக்கின் 'Yellow Letters', கேன்ஸ் திரைப்பட விழாவில் Grand Prix விருதை வென்ற ரஷ்ய இயக்குநர் ஆண்ட்ரே ஸ்வியாகின்ட்சேவின் 'Minotaur' ஆகிய படங்கள் இடம்பெறவில்லை.
குறிப்பாக, இந்த ஆண்டு IFFI விழாவில் ரஷ்யா கூட்டாளர் நாடாக (Partner Country) இடம்பெற்றுள்ள நிலையில், ரஷ்ய இயக்குநரின் திரைப்படம் விடுபட்டிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
அதேபோல், கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த அறிமுகத் திரைப்படத்திற்கான Camera d'Or விருதை வென்ற ருவாண்டா இயக்குநர் மேரி-கிளெமென்டைன் டுசாபேஜம்போவின் 'Ben'Imana' திரைப்படமும் இடம்பெறவில்லை.
பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த முன்னணி நடிப்புக்கான Silver Bear விருதை வென்ற சாண்ட்ரா ஹுல்லர் நடித்த 'Rose' திரைப்படமும் பட்டியலில் இல்லை.
வெனிஸ் திரைப்பட விழாவில் Silver Lion Grand Jury Prize வென்ற தென் கொரிய இயக்குநர் லீ சாங்-டாங்கின் 'Possible Love', சிறந்த இயக்குநர் விருது வென்ற இல்யா க்ர்ஷானோவ்ஸ்கியின் 'DAU', சிறப்பு நடுவர் குழு விருது வென்ற யுவல் ஆபிரகாம் மற்றும் ரேச்சல் சோர் இயக்கிய 'NAZA' ஆகிய படங்களும் இடம்பெறவில்லை.

