நேப்பாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காலை சுமார் 8:30 மணியளவில் பனிப்பாறைச் சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள், வாகனங்கள் என அனைத்தும் சேதமடைந்தன. வெள்ளப்பெருக்கு காரணமாக, வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ற 19 பாலங்களும், 40 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளும் சேதமடைந்துள்ளன.
இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழ்நாட்டில் இருந்து கைலாஷிற்கு சுற்றுப்பயணம் சென்று வெள்ளத்தில் சிக்கிய 57 பேர் மீட்கப்பட்டு நள்ளிரவில் சென்னை வந்தடைந்தனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே, மீட்புப் பணிகளைத் தங்களின் சொந்த படைகளே கவனித்து கொள்ளும் என நேபாள வெளியுறவு அமைச்சகம் முதலில் அறிவித்திருந்தது. ஆனால், வெளிநாட்டுப் பயணிகள் பலர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனதால், சர்வதேச தூதரகங்களின் அழுத்தத்திற்கு பணிந்து நேபாள அரசு தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்திய அரசு, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நான்கு நாடுகளின் நிபுணர் குழுக்களுக்கு மட்டுமே நேபாள அரசு அனுமதி வழங்கியுள்ளது. பொதுவான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்குப் பதிலாக, நேபாள அரசிடம் போதிய வசதிகள் இல்லாத குறிப்பிட்ட தொழில்நுட்ப பணிகளுக்கு மட்டுமே இந்த நாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நீர்மின் நிலைய சுரங்கப்பாதை மீட்புப் பணிகள், உயிரிழந்தவர்களைக் கண்டறியும் டிஎன்ஏ பரிசோதனைகள், தடயவியல் அடையாளம் காணுதல் ஆகிய தொழில்நுட்ப பணிகளுக்கு மட்டுமே இந்த நாடுகளுக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

