தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், இதுவரை விஜய்க்கு 113 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.
108ல் வெற்றி பெற்ற தவெக
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தனித்து நின்று, விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கட்சி ஆரம்பித்த முதல் தேர்தலிலேயே பெரும்பான்மையாக இளைஞர்கள் ஆதரவுடன் தவெக சாதித்து காட்டி உள்ளது. இந்நிலையில், இன்று மே 6ஆம் தேதி, ஆளுநரை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

முதல் நபராக கை கொடுத்த காங்கிரஸ்
இந்த நிலையில், முதல் நபராக தவெகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்த தமிழக காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்ட கையோடு, பனையூர் தவெக அலுவலகத்தில் விஜய்யை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாகி உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை இல்லாத வகுப்புவாத சக்திகளை ஒருபோதும் இணைத்துக் கொள்ளக் கூடாது என்ற நிபந்தனை உடன், தவெகவுக்கு, காங்கிரஸ் கை கொடுத்துள்ளது.
அதிமுக நிலைப்பாடு என்ன?
விஜய் தலைமையிலான தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அதிமுகவில் போர்க்கொடி எழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சி.வி.சண்முகம் தலைமையில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ்-க்கு நெருக்கடி அளிப்பதாக கூறப்படுவதால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது. தவெக உடன் கூட்டணி வைத்தே தீர வேண்டும் என அதிமுக தலைமைக்கு, சி.வி.சண்முகம் நெருக்கடி கொடுப்பதாகவும், முடிவு எடுக்கப்படாத பட்சத்தில் மீண்டும் ஒரு பிளவை அதிமுக சந்திக்கலாம் என்றும் தகவல் பரவுவதால், அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு
சென்னையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.சி.கருப்பணன் உள்ளிட்டோர் சந்தித்து, ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். தவெக உடன் கூட்டணி அமைக்கக் கோரி, போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தவெக உடனான கூட்டணிக்கு சி.வி.சண்முகத்தைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் ஆதரவு எனக் கூறப்படுகிறது. தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியதாக சொல்லப்படுவதால், அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

விடுதலைச்சிறுத்தைகள், கம்யூ., பாமக நிலை?
இரண்டு எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம், ஆட்சி அமைக்க ஆதரவு கோரி தவெக தலைவர் விஜய் கடிதம் அளித்துள்ளதாக, கூறப்படுகிறது. தவெக சார்பில் விசிக தலைவர் திருமாவளவனிடம் பேசி உள்ளதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ள நிலையில் 8ஆம் தேதி கூடி முடிவெடுக்க இருப்பதாக கம்யூனிஸ்டுகள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், தவெகவிற்கு பாமக ஆதரவளிக்குமா? என்ற கேள்விக்கு பதிலளிக்க அன்புமணி மறுத்து விட்டார். புன்னகைத்தபடியே, வணக்கம் நன்றி என குறிப்பிட்டு, பாமக தலைவர் அன்புமணி புறப்பட்டு சென்று விட்டார். ஆனால், ஆதரவில்லை என்று அவர் குறிப்பிடவில்லை என்பதால், சாதகமான பதில் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Link

தவெகவுக்கு நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு

