சென்னை, திருவிக நகர் தொகுதியில் போட்டியிடும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி உள்ள விசிக தலைவர் திருமாவளவன், பொற்கொடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
என்டிஏ தலைமையிலான அதிமுக கூட்டணியில் இருக்கும் பொற்கொடிக்கு, திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் ஆதரவு தெரிவித்திருப்பது பல தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

பகுஜன் சமாஜ் மாநில தலைவர்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகிலேயே கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கியது. இந்நிலையில் கட்சியின் தலைவராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை நியமிக்கலாம் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், கணவரை இழந்து ஒருமாதமே ஆகி இருந்த நிலையில் கையில் கைக்குழந்தையோடு தவித்த பொற்கொடி, கொலை வழக்கில் நீதி காண வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தற்போதைக்கு தலைவர் பதவி தனக்கு வேண்டாம் என்றும் அதற்கு பதில் தனது கணவரின் நம்பிக்கைக்குரிய ஆனந்தனுக்கு வழங்குமாறும் கூறியதாக தெரிகிறது. இதனை ஏற்று, உச்சநீதிமன்ற வழக்கறிஞரான ஆனந்தனை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது தேசிய தலைமை. மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை மாநில ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்தது.

கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம்
இந்நிலையில், தலைவரானபின் ஆனந்தனுக்கும், பொற்கொடிக்குக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் நிலவியதாக தெரிகிறது. பெயருக்குதான் நான் தலைவர் ஆனால் உண்மையான கட்சியின் தலைவராக பொற்கொடி செயல்படுவதாகவும், தன்னை முன்னிறுத்தியே அரசியல் செய்வதாகவும் ஆனந்தன் தேசிய தலைமையிடம் புகார் அளிக்க, ஆனந்தன் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக பொற்கொடியும் புகார் தெரிவித்தார். அதனை தொடர்ந்து நடந்த பகுஜன் சமாஜ் கட்சி செயற்குழு கூட்டத்தில் பொற்கொடி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனாலும் பொற்கொடி தலைமையில் கூட்டத்திற்கு 500க்கும் மேற்பட்டோர் வந்திருந்த நிலையில் இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த உட்கட்சி மோதல் தேசிய தலைவர் மாயாவதி காதுவரை செல்ல பொற்கொடி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்டார்.

அதிமுக கூட்டணியில்...
இதனால் அதிர்ச்சியடைந்த ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள், "விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை" என்று சொல்வார்கள், ஆனால் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்த பொற்கொடியை மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தே நீக்குவது சரியா என கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். இதனிடையே தனித்து இயங்கலாம் என முடிவு செய்த பொற்கொடி தனது கணவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளான ஜூலை 5 அன்று "தமிழ் மாநில பகுஜன் சமாஜ்" என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தனது கணவரின் கொலைக்கு நீதிகோரியும் பொதுவாழ்வில் இறங்கி உள்ள பொற்கொடி வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள என்டிஏ தலைமையிலான அதிமுக கூட்டணியில் கைகோர்த்துள்ளார்.

பா.ரஞ்சித் ஆதரவு
சென்னை திருவிக நகரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ள திருமதி ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் பா.ரஞ்சித் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமூகவலைதத்தில் பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த பலரும், பொற்கொடி என்னதான் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியாக இருந்தாலும் அதிமுக - பாஜக கூட்டணியில் தேர்தலில் நிற்பதாகவும், காலம் முழுக்க சனாதன எதிர்ப்பை பதிவு செய்யும் பா.ரஞ்சித் தற்போது மட்டும் தனது கொள்கையை தளர்த்திக் கொள்வதா? அவருக்கு கொள்கை முக்கியமா? அல்லது பழக்கம் முக்கியமா? என கேள்வி எழுப்பினர்.

திருமாவளவன் ஆதரவு
இது ஒருபுறமிருக்க, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார் திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன். தனது கணவர் மறைந்தபிறகு பொற்கொடி துணிச்சலாக அரசியலுக்கு வந்துள்ளதே வரவேற்கத்தக்கக்கூடிய விஷயம் என்றும் அதிலும் பெண் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும்வகையில் அதிமுக அவருக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி வாய்ப்பு கொடுத்துள்ளது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம் எனவும் தெரிவித்தார். அதேநேரம், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், திருமதி ஆம்ஸ்ட்ராங்கிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது கடமை எனவும் கூறி உள்ளார்.

வரவேற்பும் விமர்சனமும்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்துகொண்டு பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளரான பொற்கொடியை திருமாவளவன் வரவேற்றிருப்பதும், அவருக்கு ஆதரவு தெரிவித்திருப்பதும் திமுகவினர் மத்தியில் ஒருபக்கம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், திருமாவின் அரசியல் முதிர்ச்சியைதான் இந்த ஆதரவு காட்டுவதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.
Related Link

திமுக, பாஜகவை நம்ப வேண்டாம் - விஜய் பிரச்சாரம்

