தொடர்ந்து, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பினராயி தலைமையிலான இடதுசாரி கூட்டணிக்கு படுதோல்வியை பரிசாக அளித்து காங்கிரசுக்கு பாசிட்டிவ் வைபை கேரள மக்கள் பரிசாக கொடுத்தும் முதலமைச்சர் யார்?
என முடிவெடுக்க முடியாமல் டெல்லி மேலிடம் திணறி வந்த நிலையில், சதீஷன் முதல்வராக தேர்வாகி உள்ளார்.

மூன்று பேர் போட்டி
டெல்லியின் ஆஸ்தான பார்வை கொண்ட கே.சி.வேணுகோபால், ஒரு எதிர்க்கட்சி தலைவராக பினராயி விஜயனை சட்டமன்றத்தில் ஆட்டிப்படைத்த வி.டி.சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகிய 3 பேரும் முதலமைச்சர் நாற்காலிக்கு அடிபோட்டு கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸில் சத்தமில்லாமல் நடக்கும் இந்த மும்முனை யுத்தம் பேசு பொருளாகி உள்ளது.

102 இடங்களில் வெற்றி
கடவுளின் தேசமான கேரளாவில், கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களைக் கைப்பற்றி வெற்றியை தங்களுக்கு உரித்தாக்கியது. இதில், காங்கிரஸ் கட்சி மட்டுமே தனித்து நின்று 63 இடங்களில் வெற்றிவாகை சூடி உள்ளது. 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி அரியணையில் இருந்த பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு படுதோல்வியை சந்தித்துள்ளது.

இடதுசாரி கூட்டணிக்கு...
கேரள வரலாற்றில், இடதுசாரி கூட்டணிக்கு 2026 சட்டமன்ற தேர்தலில்தான் மிகவும் குறைவான தொகுதிகள் கிடைத்துள்ளது. இந்த படுதோல்வி பினராயி விஜயனே எதிர்பார்க்காத ஒன்றுதான். காரணம், கடந்த 2021 தேர்தலில் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர கை கொடுத்த இலவச உணவு பொருட்கள் வழங்கும் கிட், வறுமையற்ற கேரளா, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து, கல்வி மற்றும் சுகாதாரம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் இருமடங்காக உயர்வு உள்ளிட்டவை 2026ம் வசமாக்கும் என மலைபோல் நம்பிக் கொண்டிருந்தார்.
அதிருப்தியும் ஊழல் புகார்களும்
இந்த திட்டங்கள் எல்லாம் பெரிய சாதனைகள் எனவும் அவைகள் நிச்சயம் கை கொடுக்கும் எனவும் பினராயி ஒருபுறம் மனக்கோட்டை கட்டி கொண்டிருக்க, அவரது ஆட்சியின் மீதான அதிருப்தியும் ஊழல் புகார்களும் மக்கள் மத்தியில் வைரஸ் போன்று பெருகிக் கொண்டே இருந்துள்ளது. வைரஸ் எப்படி கண்ணுக்கு தெரியாதோ அதேபோன்று மக்கள் மத்தியில் தன் மீது இருந்த அதிருப்தியும் பெருகிக்கொண்டே போனது பினராயி கண்ணுக்கும் தெரியவில்லை. குறிப்பாக 2024-2025 காலகட்டத்தில் அவர் மீது பல்வேறு தரப்பினரால் ஊழல் புகார் முன்வைக்கப்பட்டது.

தங்கம் கடத்தல் வழக்கு
பினராயி விஜயனின் மகள் டி.வீணா 'எக்ஸாலாஜிக்' Exalogic என்ற ஐடி நிறுவனம் மூலம், கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் CMRL என்ற நிறுவனத்திடமிருந்து எந்தவித சேவையும் வழங்காமல் மாதப்படி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் 'லைஃப் மிஷன்' திட்டத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழ, அமலாக்கத்துறையும் அது தொடர்பாக விசாரணை நடத்தியது. கேரளாவில் பெரும் புயலை கிளப்பிய ஐக்கிய அரபு அமீரக தூதரக தங்கம் கடத்தல் வழக்கில், பினராயி அலுவலகத்திற்கும், அவரது முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
சறுக்கலுக்கு காரணம் ஊழல் புகார்
அதுமட்டுமல்லாது, 1990களில் நடந்த நீர்மின் திட்ட ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம்சாட்டி வந்தது. இந்த வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அது நிலுவையில் உள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் பினராயி விஜயனும், அவரது குடும்பத்தினரும் மறுத்திருந்தாலும் மக்கள் மத்தியில் எழுந்த அதிருப்தியை அழிக்க முடியவில்லை. இந்த ஊழல் புகார்கள்தான் இடதுசாரிகளின் சறுக்கலுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன என்றும் சொல்லப்படுகிறது.

Retta Chankan
அஞ்சாமை, உறுதியான தலைமை மற்றும் அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் தைரியம் உள்ளவர், நிர்வாகத்திறன் உள்ளவர், கடுமையான முடிவுகளை எடுப்பதில் தயக்கம் காட்டாதவர் என்பதை குறிக்கும் சொல்லான Retta Chankan என பினராயி விஜயனை அழைத்து புகழ்ந்தவர்கள் ஏராளம். இப்படி புகழப்பட்ட பினராயிக்கு தற்போதை படுதோல்வி பெரும் பின்னடைவு என்பதை மறுக்க முடியாது. இலவச உணவு பொருட்கள் வழங்கும் கிட் வழங்கி 88 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களின் அன்பை பெற்ற பினராயி, பதிலுக்கு அந்த அன்பாளர்களும் வெற்றி என்ற கிப்டை 2026 தேர்தலில் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தார். ஆனால், Kit-ஐ வாங்கிய மலையாளதேச மக்களோ கிட் கொடுத்தால் கிப்ட் கொடுக்க முடியுமா? ஆட்சியில் ஹிட் கொடுத்தால் மட்டும்தான் ரிசல்ட்டிலும் கிப்ட் கிடைக்கும் என பசுமரத்தாணிபோல பளிச்சென பதிய வைத்துள்ளனர்.

கேரளத்தின் முதல்வர் யார்?
பினராயிக்கு பளிச்சென நெகட்டிவ் கிப்ட் கொடுத்த மக்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு பாசிட்டிவ் கிப்ட் கொடுத்தனர். ஆனால், பாசிட்டிவ் கிப்டை பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்திருந்தாலும் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது டெல்லி தலைமை. டெல்லி மேலிடத்திற்கு நெருக்கமான கே.சி.வேணுகோபால், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஆளுங்கட்சியைத் திணறடித்த வி.டி.சதீசன் மற்றும் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகிய 3 பேரும் காய்நகர்த்திவருவதாக கூறப்படுகிறது. 3 பேருமே முக்கியமானவர்கள்தான், அதில் யார் முகத்தை பார்க்க? யார் முகத்தை முறிக்க? என கட்சித்தலைமையும் முடிவெடுக்க முடியாமல் முழித்துக் கொண்டிருக்கிறதாம்.

கட்சித் தலைமைக்கு தர்ம சங்கடம்
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், ஆலப்புழா தொகுதியின் மக்களைவை உறுப்பினருமான கிங் மேக்கர் கே.சி.வேணுகோபாலுக்கு ராகுல் காந்தியின் ஆஸ்தான பார்வை இருப்பதாகவும், அதோடு 52 எம்எல்ஏக்களின் சப்போர்டும் இருப்பதாக அரசியல் வட்டாரம் கூறுகிறது. டெல்லி மேலிடம் கேட்டுக் கொண்டதால்தான் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலேயே கே.சி.வேணுகோபால் களம் காணவில்லை எனவும் அதனால் இந்த ஃபேவரையும் செய்து கொடுக்க முடியாது என அவரிடம் எப்படி கூற முடியும் என்ற தர்மசங்கடமும் கட்சி தலைமைக்கு ஏற்பட்டுள்ளதாம்.

வேணுகோபால் vs சதீசன் vs ரமேஷ்சென்னிதாலா
இதற்கு மத்தியில் வி.டி.சதீசனையும் குறைத்து எடைபோட்டுவிட முடியாது. கடந்த 5 ஆண்டுகளாகச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக, முதல்வர் பினராயி விஜயனை தனி ஒரு ஆளாக ஆட்டிப்படைத்தவர். அவருக்கு இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் ஆதரவு அதிகமாகவே உள்ளது. 2001 முதல் 6 முறை பரவூர் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு அசைக்க முடியாத ஒரு தலைவராக வலம் வருகிறார். ஆகவே, அதையும் கருத்தில்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இதனிடையே, தனக்கு இந்த முறை வாய்ப்பு வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறாராம் ரமேஷ் சென்னிதலா. ஹரிப்பாடு தொகுதியின் நீண்ட கால பிரதிநிதியான இவர் முன்னாள் உள்துறை அமைச்சராகவும், பலமுறை அமைச்சராகவும் இருந்தவர். இவருடையே சேவையும் கட்சிக்கு தேவையே.

கேரளத்து மக்கள் எதிர்பார்ப்பு
இந்த 3 பேரும் முதலமைச்சர் ரேஸில் இருப்பதால்தான் முடிவு எடுப்பதிலும் காலதாமதம் நீடிக்கிறதாம். இதுஒருபக்கம் இருந்தாலும் டெல்லி தலைமையின் ஆம் என்ற டிக்கில் கே.சி.வேணுகோபாலின் பெயர்தான் முதலில் உள்ளதாம். அதனால், மற்ற இருவரையும் மனம்கோணாமல் சமாதானப்படுத்தும் முயற்சியில் டெல்லி தூதுவர்கள் இறங்கி உள்ளார்களாம். ஒருவேளை தூதுவர்களின் காம்ப்ரமைஸ் முடிந்து கே.சி.வேணுகோபால் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தால் மாநில அரசியலில் புதிய திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், முதலமைச்சரை யார் என்பதை முடிவெடுப்பதற்கே நேரமும் காலத்தையும் கடத்திக் கொண்டிருந்தால் எப்படி? சட்டென முடிவெடுத்து பட்டென நிர்வாகத்தை ஆரம்பித்து மாற்றத்தை தொடங்குங்கள் என மலையாள மக்கள் கூறி வருகின்றனர்.

கேரள முதல்வராக சதீஷன் தேர்வு
இந்த நிலையில், இன்று மே 14ஆம் தேதி, கேரளத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்து உள்ளது. கேரளத்தின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.டி.சதீஷன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 11 நாட்கள் இழுபறிக்கு பின்னர் முதலமைச்சரை, காங்கிரஸ் தலைமை தேர்வு செய்து உள்ளது.
Related Link

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி, முதலமைச்சரானார் சுவேந்து அதிகாரி

