வரும் தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 600 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
‘இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களான 22-ம் தேதி (சனி) 200 கோடி ரூபாய், 23-ம் தேதி (ஞாயிறு) 200 கோடி ரூபாய், தீபாவளி அன்று (24-ம் தேதி) 200 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்ய வேண்டும்.
இதற்காக, அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளிலும் 40 சதவீதம் சாதாரண ரக மதுபானங்கள், 40 சதவீதம் நடுத்தர ரக மதுபானங்கள், 20 சதவீதம் உயர்தர மதுபானங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும். அத்துடன், மதுபானங்கள் குறைவாக விற்பனையாகும் மாவட்டங்களில் அதற்கான காரணங்களை கண்டறிய மண்டல மேலாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மதுபான கிடங்குகளில் உள்ள மதுபானங்கள், பதிவேடுகள் மற்றும் கோப்புகளுக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாத வண்ணம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன், தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் இருப்பில் உள்ள மதுபான பெட்டிகள், பதிவேடுகள் மற்றும் கோப்புகள் மழை மற்றும் வெள்ள நீரால் பாதிக்கப்படாதவாறு தரையில் இருந்து உயர்த்தப்பட்டு, பாதுகாப்பான முறையில் வைக்க வேண்டும்’ என, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ‘தினத்தந்தி’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

