Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எல் நினோ : சிங்கப்பூரில் கடும் வெயில். 300 குளிரூட்டப்பட்ட மையங்கள் தயார்

எல் நினோ : சிங்கப்பூரில் கடும் வெயில். 300 குளிரூட்டப்பட்ட மையங்கள் தயார்

சிங்கப்பூரில் வெப்பநிலை அபாயகரமான அளவுக்கு அதிகரித்தால், பொதுமக்களை பாதுகாக்க நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட மையங்கள் திறக்கப்பட உள்ளன.

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் வெப்பத்தை சமாளிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமூகக் கூடங்கள், குடியிருப்பாளர் சங்கங்கள் மற்றும் சில உள்விளையாட்டு அரங்குகள் குளிரூட்டப்பட்ட மையங்களாக மாற்றப்படும். இங்கு பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை

சிங்கப்பூரின் தேசிய வானிலை செயலியான 'மைஇஎன்வி' மூலம் கடும் வெப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறித்து பொதுமக்களுக்கு குறைந்தது 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்படும் என எரிசக்தி மற்றும் பருவநிலைக் கொள்கைப் பிரிவு இயக்குநர் கெல்வின் சோங் தெரிவித்துள்ளார்.

ஒரு குளிரூட்டப்பட்ட மையத்தில் கூட்டம் அதிகமாகி இடப்பற்றாக்குறை ஏற்பட்டால், முதியோர் உள்ளிட்ட வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதிகரிக்கும் வெப்பம்

சிங்கப்பூர் தற்போது வறட்சியான தென்மேற்கு பருவமழைக் காலநிலை மற்றும் எல் நினோ தாக்கம் ஆகிய இரண்டையும் எதிர்கொண்டு வருகிறது. இதனால் வழக்கத்தை விட அதிக வெப்பமும், வறட்சியும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் 9 வெப்பக் கண்காணிப்பு நிலையங்களின் தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 17 நாட்கள் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5 நாட்கள் மட்டுமே அதிக வெப்பம் பதிவாகியிருந்தது.

35 டிகிரி… அபாய எச்சரிக்கை

சிங்கப்பூரில் தினசரி பதிவாகும் வெப்பநிலை தொடர்ந்து 3 நாட்களுக்கு சராசரியாக 35 டிகிரி செல்சியஸ் என்ற அளவை எட்டினால், கடுமையான வெப்பநிலை எச்சரிக்கை விடுக்கப்படும்.

எல் நினோ பருவநிலை தற்போது மிகவும் தீவிரமான 'காட்ஜில்லா' நிகழ்வு போன்று மாறி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

2027ல் உச்சகட்ட வெப்பமா?

ஏற்கனவே கடும் வெப்பத்தை எதிர்கொண்டு வரும் சிங்கப்பூரில், 2027 மார்ச் முதல் மே மாதம் வரை உச்சகட்ட வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாக தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது.

'வெப்பநிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வெப்பம் உச்சத்தை எட்டினால், வெப்பத்தை எதிர்கொள்ளும் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த தயாராக இருக்கிறோம்' என்று கெல்வின் சோங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் கடைசியாக 2016-ல் கடுமையான வெப்பத்தை சந்தித்தது. அந்த காலகட்டத்தில் வலுவான எல் நினோ தாக்கம் காணப்பட்டது.

இதனிடையே, எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடிய வெப்பநிலையை சமாளிப்பதற்காக, சிங்கப்பூர் அரசு 2025 தொடக்கத்தில் முதல் தேசிய அளவிலான வெப்ப மேலாண்மை திட்டத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Patrikai