Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் : அமெரிக்காவில் சிக்கிய பிரபல வயலின் கலைஞர் ஹெச்.என்.பாஸ்கர்?

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் : அமெரிக்காவில் சிக்கிய பிரபல வயலின் கலைஞர் ஹெச்.என்.பாஸ்கர்?

கர்நாடக இசைக் கலைஞரும் வயலின் வித்வானுமான ஹெச்.என்.பாஸ்கர் (50), சிறுமி ஒருவருக்கு எதிராகப் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் 4 கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக அவர் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் நகரில் உள்ள சிறையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மைசூரைச் சேர்ந்த ஹெச்.என்.பாஸ்கர் மீது, 18 வயதுக்குக் குறைவான சிறுமியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு வகையான பாலியல் குற்றங்கள் தொடர்பாக தலா இரண்டு வழக்குகள் என மொத்தம் நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் 4 முதல் 26-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தக் குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நவம்பர் 6-ம் தேதி கலிபோர்னியாவின் சான் டியாகோ உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதே நாளில் அவருக்கு எதிராக கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, 18 வயதுக்குக் குறைவான நபருடன் வாய்வழிப் பாலியல் தொடர்பு கொண்டதாக இரண்டு குற்றச்சாட்டுகளும், வெளிப்பொருளைப் பயன்படுத்தி பாலியல் ஊடுருவலில் ஈடுபட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 21-ம் தேதி நிலவரப்படி, பாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் சான் டியாகோ நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அவர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்பதையும் அப்போது நீதிமன்றத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை.

இதற்கிடையே, பாஸ்கர் தற்போது மாசசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டனில் உள்ள சிறையில் இருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தி நியூஸ் மினிட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரை கலிபோர்னியாவுக்கு அழைத்துச் செல்வதற்கான ஒப்படைப்பு நடவடிக்கைகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் நீதிமன்றத்தின் பொது விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

டி.எம்.கிருஷ்ணா வேதனை

பாஸ்கருடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சமூக வலைதளத்தில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதில், 'கடந்த ஒரு வாரமாக மிகவும் வேதனையான சூழல் நிலவுகிறது. பாஸ்கருடன் பல மேடைகளில் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எனது நண்பராகவும் இருந்து வருகிறார். இந்தக் குற்றச்சாட்டுகள் எனக்கு மிகுந்த கோபத்தையும் ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எனது உறுதி மாறாது. அமெரிக்காவில் விசாரணை நடைபெற்று வருவதால், இதற்கு மேல் எதுவும் கூற முடியாது' என்று தெரிவித்துள்ளார்.

பாடகி சின்மயியும் ஆதரவு

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஆதரவாகப் பின்னணிப் பாடகி சின்மயி ஸ்ரீபாதாவும் கருத்துத் தெரிவித்துள்ளார். தன்னிடம் சிலர் தொடர்புகொண்டு, அந்த இசைக் கலைஞரால் பாதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவர்களின் அனுமதியின்றி தனிப்பட்ட விவரங்களையோ, அனுபவங்களையோ வெளியிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய சட்ட உதவிகளைப் பெற்றுத் தரத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யார் இந்த ஹெச்.என்.பாஸ்கர்?

50 வயதான ஹெச்.என்.பாஸ்கர், கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் ஆவார். வயலின் வித்வான்களான எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஆர்.என்.தியாகராஜன் ஆகியோரிடம் இசைப் பயிற்சி பெற்றவர். அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் 'ஏ' கிரேடு கலைஞராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. விசாரணையின் முடிவிலேயே குற்றச்சாட்டுகள் குறித்த சட்டரீதியான முடிவு தெரியவரும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Patrikai