காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பூர்வீக வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற பஞ்சாபைச் சேர்ந்த சீக்கிய தொழிலதிபர் சுக்தேவ் சிங் காங் திட்டமிட்டுள்ளார்.
இதற்கான அனுமதிகளையும் அவர் ஏற்கெனவே பெற்றுள்ளார்.
சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் 'Belonging: A Journey of Love' என்ற நூல் தற்போது கவனம் பெற்றுள்ள நிலையில், இத்தாலியில் உள்ள அவரது குடும்பத்தின் பூர்வீக வீட்டை அருங்காட்சியகமாக மாற்றும் முயற்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இத்தாலியின் வெனிட்டோ மாகாணத்தில் உள்ள லூசியானா என்ற சிறிய நகரில் மைனோ குடும்பத்துக்குச் சொந்தமான இந்த வீட்டை சுக்தேவ் சிங் காங், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளார். ஆறு படுக்கையறைகளைக் கொண்ட இந்த வீட்டின் முகப்பில், இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்தில் 'இந்தியா ஹவுஸ், பிறந்த இடம், டிசம்பர் 9, 1946, சோனியா காந்தி' என எழுதப்பட்ட பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்த சுக்தேவ் சிங் காங் கூறியதாவது:
'இந்த வீட்டை வாங்கியதில் இருந்து அதன் பழமையான தோற்றத்தை அப்படியே பாதுகாத்து வருகிறோம். தேவையான பழுதுபார்ப்புப் பணிகளை மட்டுமே செய்துள்ளோம். இத்தாலிய சட்டப்படி கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றத்தை மாற்ற முடியாது.
இந்த வீட்டை முன்பு வைத்திருந்த குடும்பத்தினர் அமெரிக்காவுக்குச் செல்ல முடிவு செய்ததால் விற்பனைக்கு வந்தது. அவர்கள் ஏற்கெனவே சோனியா காந்தியின் குடும்பத்தினரிடம் இருந்து இந்த வீட்டை வாங்கியிருந்தனர். சோனியாவுடன் தொடர்புடைய வீடு என்பதால், இதை ஓர் இந்தியருக்கே விற்க வேண்டும் என அவர்கள் விரும்பினர். இதனால் நான் வாங்கினேன்.
சோனியா வாழ்ந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முதலில் அங்கு சென்றேன். அப்போது வீடு விற்பனைக்கு இருப்பதை அறிந்து வாங்க முடிவு செய்தேன்.
தற்போது இந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதிகளையும் பெற்றுவிட்டோம். சோனியா காந்தியின் தந்தை ஸ்டெபானோ மைனோ கொத்தனாராகவும், கட்டுமானத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இது அவர்களது பூர்வீக வீடு. சோனியா குடும்பத்தினர் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்வையிடலாம். அவர்கள் விரும்பினால் வீட்டின் சாவியைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்' என்றார்.
மேலும், அந்த வீட்டில் மைனோ குடும்பத்தினரின் பழைய மரச்சாமான்கள் மற்றும் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் மட்டுமே தற்போது உள்ளதாக அவர் தெரிவித்தார்.
'இந்த வீட்டை வாடகைக்கு விடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. மாதம் 800 யூரோவுக்கும் அதிகமான வாடகை கிடைக்கும் என்று சிலர் கூறியுள்ளனர். இருப்பினும், இதை அருங்காட்சியகமாகவே மாற்ற விரும்புகிறோம்.
சோனியா காந்தியும் அவரது பிள்ளைகளான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் தங்களிடம் உள்ள சில தனிப்பட்ட பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவற்றை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த விரும்புகிறோம்' என்றும் அவர் கூறினார்.
தற்போது பிரேசியா நகரில் வசிக்கும் சுக்தேவ் சிங் காங், அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் உள்ள லூசியானாவில் இந்த வீட்டை தனது மனைவி மற்றும் மகளின் பெயரில் வாங்கியுள்ளார்.
இந்த வீட்டை ரியல் எஸ்டேட் முதலீடாகப் பார்க்கவில்லை என்றும், இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான சோனியா காந்தியின் குடும்பப் பின்னணி மற்றும் தனிப்பட்ட வரலாற்றுடன் தொடர்புடைய இடத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவே கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டைக் காண இந்தியாவில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட உள்ளூர் வணிகங்களுக்கும் வருவாய் அதிகரித்துள்ளது.
சோனியா காந்தியின் குடும்பத்தினரை அறிந்த உள்ளூர் மக்களும் அவரைச் சந்திக்க ஆர்வமாக இருப்பதாக சுக்தேவ் சிங் கூறியுள்ளார். திருமணத்துக்குப் பிறகு சோனியா காந்தி இந்தக் கிராமத்துக்கு இரண்டு முறை மட்டுமே வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீட்டை குருத்வாராவாக மாற்றலாம் என்று சிலர் யோசனை தெரிவித்துள்ளனர். ஆனால், அதன் பழமையான அடையாளத்தையும் தன்மையையும் மாற்றாமல் பாதுகாக்கவே விரும்புவதாக சுக்தேவ் சிங் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தியின் பிறந்த நாளான டிசம்பர் 9-ம் தேதி ஆண்டுதோறும் அந்த வீட்டில் நிகழ்ச்சி ஒன்றையும் அவரது குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். இந்த வீட்டை வாங்கியபோது நடைபெற்ற திறப்பு விழாவில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
வீட்டைப் பராமரிப்பதற்காக இத்தாலியைச் சேர்ந்த பெண் ஒருவரை பணியமர்த்தியுள்ளார். அவர் வாரத்தில் இரண்டு நாட்கள் வந்து வீட்டைச் சுத்தம் செய்து பராமரிக்கிறார். அவரிடம் வீட்டின் சாவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக மாதம் 100 யூரோ ஊதியமும் வழங்கப்படுகிறது. மேலும், வீட்டுக்கான சொத்து வரியாக ஆண்டுக்கு சுமார் 1,000 யூரோ செலுத்தி வருவதாகவும் சுக்தேவ் சிங் தெரிவித்துள்ளார்.

