Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"2014-ல் திமுகவும் இதைத்தான் காங்கிரஸுக்கு செய்தது.." - ஜோதிமணி

"2014-ல் திமுகவும் இதைத்தான் காங்கிரஸுக்கு செய்தது.." - ஜோதிமணி

மிழக சட்டசபைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றும் பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் நீண்ட காலம் இருந்த காங்கிரஸ் திடீரென தவெகவுக்கு ஆதரவு அளித்து புதிய கூட்டணியில் இணைந்துள்ளது.

இதை திமுக துரோகம் என குற்றம்சாட்ட, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, கூட்டணிகள் சேர்வதும் பிரிவதும் அரசியலில் இயல்பு எனவும், இருபுறமும் கடுமையான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதும், அவர்கள் ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, மாற்றுக் கட்சிகளின் ஆதரவைப் பெற முயன்று வருகிறது. அந்த வகையில், திமுக கூட்டணியில் 10 ஆண்டுகளாக இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, தற்போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நடந்துமுடிந்த தேர்தலில், 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5இல் வெற்றிபெற்றிருந்தது.

 தவெக தலைவர் விஜய்

இந்நிலையில் தற்போது தவெகவுடன் இணைந்திருக்கும் காங்கிரஸ் வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இக்கூட்டணியே தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

இது, திமுகவுக்கு மேலும் பின்னடைவாகப் பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸின் இந்தச் செயலுக்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, இந்த நடவடிக்கையை திமுக ''ஒரு துரோகம்'' என வர்ணித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் சரவணன் ஆனந்ததுரை, "காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு துரோகம் செய்துவிட்டது. அவர்கள், தமிழக மக்களுக்குத் துரோகம் செய்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தோல்வி | ஸ்டாலினைச் சந்தித்த ரஜினி.. பேசியது என்ன?

இந்நிலையில் திமுகவினர் தடித்த வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், "நீண்ட காலம் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில பயணித்திருக்கிறது. ஒரு கூட்டணியில் இருக்கும் போது ஏற்ற ,இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும்.நானே பொதுவெளியில் முரண்பட்டிருக்கிறேன். இப்பொழுது தமிழ்நாட்டின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக த.வெ.கவுடன் கூட்டணி சேர்வது என்ற முடிவை எடுத்துள்ளது.

அரசியலில் கூட்டணிகள் சேர்வதும், பிரிவதும் இயல்பானது தான். திமுக கூட 2014 ல் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பிற்கு ஒரு வாரம் முன்பு நீண்ட கால கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றியிருக்கிறது. நாங்கள் திடீரென தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதற்காக நாங்கள் திமுகவை காட்டமாக விமர்சிக்கவில்லை. அது ஒரு அரசியல் நிலைப்பாடு என்றே புரிந்துகொண்டோம்.

விஜய்க்கு பெருகும் ஆதரவு.. இரண்டாக உடையும் அதிமுக? சூடுபிடிக்கும் அரசியல் களம்!

இப்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே நாம் பரஸ்பரம் மரியாதையோடு கூட்டணியில் இருந்து பிரிவதுதான் நல்லது. இருபுறமும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக திமுக தேர்தலில் தோல்வியடைந்திருக்கிற சூழ்நிலையில் அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே தோல்வியடைந்திருக்கிற நிலையில், நேற்றுவரை கூட்டணியில் இருந்துவிட்டு அதுகுறித்து மிகுந்த காட்டமாக விமர்சிப்பது அரசியல் நாகரிகமோ, காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமோ அல்ல.

காங்கிரஸ் கட்சியும். தொடர்ச்சியாக மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கிறோம். அதற்கு தேசிய அளவில் பல்வேறு காரணங்கள் உள்ளன. அதற்காக யாரும் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தால் இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியை நடத்த முடியாது.

 ஜோதிமணி

அதே போல எமது தலைவர் ராகுல்காந்திக்கு நாங்கள் யாரிடம் இருந்தும் நற்சான்றிதழை எதிர்பார்க்கவில்லை. இந்த நாட்டில் பாஜகவின் பாசிச ஆட்சியை ஆட்சியை சமரசமற்று எதிர்த்து வீழ்த்தக்கூடிய வல்லமை உள்ள ஒரே தலைவர் அவர்தான் என்பதை நாடறியும். அவரை அவதூறு செய்வது யாராக இருந்தாலும் அதை நாங்கள் ஏற்கவோ பார்த்துக்கொண்டிருக்கவோ மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அரசியலில் ஏறகனவே இருந்த கூட்டணிகள் பிரிவதும்,புதிய கூட்டணிகள் உருவாவதும் இயல்பானதுதான் என்கிற அரசியல் புரிதலோடு தமிழ்நாட்டின் நலனையும்,எதிர்காலத்தையும் பாதுகாக்கும் பயணத்தில் முன்னகர்வோம்"

தவெக ஆதரவு விவகாரம் | காங்கிரஸைச் சாடிய திமுக.. பதிலடி கொடுத்த கார்த்திக் சிதம்பரம்!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai