Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இம்ரான் கானுக்கு மருத்துவ உதவி.. 21 கேப்டன்கள் கடிதம்.. பரிசீலிக்குமா பாகிஸ்தான்?

இம்ரான் கானுக்கு மருத்துவ உதவி.. 21 கேப்டன்கள் கடிதம்.. பரிசீலிக்குமா பாகிஸ்தான்?

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும் மனிதாபிமான உதவிகளும் வழங்கக் கோரி, இந்தியாவின் சுனில் கவாஸ்கர், கபில்தேவ் உட்பட 21 முன்னாள் சர்வதேச கிரிக்கெட் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது ஊழல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சில வழக்கில் தண்டனைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடியாலா தனிமைச் சிறையில் உள்ளார். இந்த நிலையில்தான், நீண்டகாலத் தனிமைச் சிறைவாசம் இம்ரான் கானின் உடல்நலனைப் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் கூறி, அவரை மருத்துவமனைக்கு மாற்றக் கோரி அவரது தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இம்ரான் கானை உடனடியாக, அதாவது அடுத்த 48 மணிநேரத்திற்குள் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிகிச்சை முடிந்து மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 imran khan

இதற்கிடையே, நீதிமன்றம் பணித்த முழு மருத்துவக் குழுவின் பரிசோதனை முடிவதற்கு முன்பே மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும் மனிதாபிமான உதவிகளும் வழங்கக் கோரி, இந்தியாவின் சுனில் கவாஸ்கர், கபில்தேவ், திலீப் வெங்சர்க்கார், கிரெக் சாப்பல், ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக், ஆடம் கில்கிறிஸ்ட், இயான் சாப்பல், கிம் ஹியூஸ், அலாஸ்டையர் குக், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், நாசர் ஹுசைன், மைக்கேல் ஆர்தர்டன், டேவிட் கௌவர், மைக்கேல் பிரியர்லி, சர் கிளைவ் லாயிட், அர்ஜுனா ரணதுங்கா, ஜான் ரைட், லீ ஜெர்மன் உட்பட 21 முன்னாள் சர்வதேச கிரிக்கெட் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அவர்கள் எழுதியிருக்கும் கடிதத்தில், 'பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இம்ரான் கானின் தனிப்பட்ட மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு அவரது உடல்நிலையை (குறிப்பாக வலது கண் பார்வைக் குறைபாடு) முழுமையாகப் பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும். நீதிமன்றம் அனுமதித்துள்ள வாராந்திரக் குடும்பச் சந்திப்புகளை எந்தவித நிர்வாகத் தாமதமும் இன்றித் தொடர்ந்து அனுமதிக்க வேண்டும்.

 imran khan

மருத்துவக் குழு பரிந்துரைக்கும் தேவையான சிகிச்சைகளை எவ்வித தாமதமுமின்றி உடனடியாக வழங்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ள அவர்கள், பாகிஸ்தானின் உள்நாட்டு சட்டப் போராட்டங்களில் தலையிட விரும்பவில்லை என்றும், கிரிக்கெட் மூலம் இணைந்த சக வீரர் என்ற முறையில் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே இக்கோரிக்கையை வைப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai