Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு.." அதிமுகவில் இருந்து விலகிய வைகைச்செல்வன்!

"மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு.." அதிமுகவில் இருந்து விலகிய வைகைச்செல்வன்!

திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக்கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய தவெக, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்த தேர்தலில் பெருத்த தோல்வியடைந்த அதிமுக 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுகவின் ஒரு தரப்பு தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. இதனால் அவர்களுடைய கட்சிப் பொறுப்புகளை இபிஎஸ் பறித்து உத்தரவிட்டார். இதற்கிடையே, தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் பழனிசாமி பக்கம் வந்தார்கள்.

 எடப்பாடி பழனிசாமி

அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்ட இபிஎஸ், கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு அவர்களுக்கு வேறு பொறுப்புகளை வழங்கினார். ஆனாலும் இதில் அவர்களுக்கு அதிருப்தி நிலவுவதாகவும், அவர்களும் இபிஎஸ்ஸுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, அதிமுகவில் இருந்து போட்டியிட்ட பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா ஆகியோர் தங்கள் பதவியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். இவர்களைத் தவிர அதிமுகவின் முகங்களாக அறியப்பட்ட வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜ் உள்ளிட்ட தலைவர்களும் தவெகவில் ஐக்கியமாகினர்.

இவர்களைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கைக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கரும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அக்கட்சியிலிருந்து விலகியதுடன், தங்களது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தனர். தொடர்ந்து, அவர்களும் தவெகவில் இணைந்தனர். அதேபோல், தவெகவில் இணைவதாக தகவல் எழுந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதியும் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக்கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாகஅதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எழுதிய விலகல் கடிதத்தில், மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு என்று குறிப்பிட்டுள்ளார். இயக்கமும், தொண்டர்களும் அழிந்தாலும் தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருக்க முடியாது என்றும், திமுகவோடு இணைந்து ஆட்சியமைக்க முடிவெடுத்ததன் மூலம்அதிமுக தனது அடையாளத்தை இழந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai