Dailyhunt
நட்சத்திர தொகுதி | அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஹாட்ரிக் வெற்றி தந்த திருவண்ணாமலை.. ஓர் அலசல்!

நட்சத்திர தொகுதி | அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஹாட்ரிக் வெற்றி தந்த திருவண்ணாமலை.. ஓர் அலசல்!

ட்சத்திர தொகுதியில் நாம் காணவிருப்பது அமைச்சர் எ.வ.வேலுவின் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி.

அமைச்சர் எ.வ.வேலுவோடு நீண்டகால பிணைப்பில் இருந்த தொகுதி என்றால், அது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு தொகுதிதான்.1984, 2001, 2006 என்று 3 தேர்தல்களில் எ.வ.வேலு வெற்றி பெற்றுள்ளார்.

2009இல் தொகுதி மறுசீரமைப்பின்போது தண்டராம்பட்டு நீக்கப்பட்டு, அதன் ஒருபகுதி திருவண்ணாமலையுடன் இணைக்கப்பட்டபோது, அந்த தொகுதிக்கு மாறினார் எ.வ.வேலு. 2011, 2016, 2021 மூன்று தேர்தல்களிலுமே வேலுவுக்கு ஹாட்ரிக் வெற்றியை தந்தது திருவண்ணாமலை. 1951இல் உருவான திருவண்ணாமலை தொகுதியில், அதிமுக ஒருமுறைகூட வெற்றிபெற்றதில்லை என்பது வரலாறு. இதுவரை 16 தேர்தல்களைச் சந்தித்துள்ளது திருவண்ணாமலை தொகுதி. அதில் 9 முறை திமுகவும், 6 முறை காங்கிரஸும் மாறிமாறி வெற்றி பெற்றுள்ளன. 2016 தேர்தலில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற எ.வ.வேலு, 2021 தேர்தலில் சுமார் 95 ஆயிரம் வாக்குகளாக வெற்றி வித்தியாசத்தை உயர்த்தினார்.

தற்போது இந்த தொகுதியில் சுமார்1,86,500 வாக்காளர்கள் உள்ளனர். அமைச்சராகப் பொறுப்பேற்ற கடந்த 5 ஆண்டுகளில் திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தியதோடு, பல கோடி மதிப்பிலான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார் எ.வ.வேலு. மாடவீதிகளில் 30 கோடியில் சிமெண்ட் சாலை, டைட்டில் பார்க், கிரிவலப் பாதை வசதிகள் என தொகுதிக்கு நிறையவே செய்திருக்கிறார். ஆனாலும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையாதது, போக்குவரத்து நெரிசல், உள்ளூர் மக்களுக்கான தனி தரிசன வரிசை என மக்களின் எதிர்பார்ப்புகளும் அதிகம். இந்த முறையும் திமுகவின் எ.வ.வேலுவே திருவண்ணாமலை தொகுதியில் களமிறங்குகிறார். அவருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் களம் காண்கிறார். நாதக சார்பில் விக்னேஷ், தவெக சார்பில்அருள் ஆறுமுகம் போட்டியிடுவதால், களம் சூடுபிடித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai