Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஒரே நாளில் பல்டியடித்த ட்ரம்ப்... அணுசக்தி ஒப்பந்தம்.. சவூதிக்கு  செக்!!

ஒரே நாளில் பல்டியடித்த ட்ரம்ப்... அணுசக்தி ஒப்பந்தம்.. சவூதிக்கு செக்!!

செய்தியாளர் - M.மீரா

மெரிக்கா - சவுதி அரேபியாவுடன் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்பிலான அணுசக்தி ஒப்பந்தத்தில் ஜூலை 22 அன்று கையெழுத்திட்டது.

சவுதி அரேபியா அணு தொழில்நுட்பத்திற்காக சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை நாடும் என்று அமெரிக்கா அஞ்சியதால் இந்த ஒப்பந்தம் நடைபெற்றதாக கூறப்பட்டது. பொதுவாக அமெரிக்கா பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் அணுசக்தி ஒப்பந்தங்களில், அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை மறுசுழற்சி செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதில் அந்த 'Gold Standard' பாதுகாப்பு விதிமுறைகள் எதுவும் இடம்பெறவில்லை என தகவல்கள் வெளியாகியது. இது எதிர்காலத்தில் யுரேனியத்தை செறிவூட்ட, சவுதி அரேபியாவை அனுமதிக்கக்கூடிய ஒரு முக்கிய அணுசக்தி ஒப்பந்தம் என்று கூறப்பட்டது.

 Trump & Netanyahu

மேலும் மத்திய கிழக்கில் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக பரவலாக நம்பப்படும் இஸ்ரேலும் இந்த ஒப்பந்தம் குறித்து கவலை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி 24 மணி நேரத்திற்குள் இந்த ஒப்பந்தம் சவூதி அரேபியாவின் யுரேனியம் செறிவூட்டலை அனுமதிக்காது என்றும் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் பிற நாடுகள் இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட, அமெரிக்காவின் ஆதரவு பெற்ற கட்டமைப்பான ஆபிரகாம் உடன்படிக்கைகளில் சவூதி அரேபியா இணைய வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

அதாவது சவூதி அரேபியா, இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை இயல்பாக்கினால் மட்டுமே அணுசக்தி ஒப்பந்தம் முன்னெடுத்து செல்லப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருப்பது சவுதி அரேபியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 America - Saudi arabia

இது குறித்து சவூதி அரேபியா தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சுதந்திரமான பாலஸ்தீன நாடு உருவாகும் என்ற நம்பகமான உறுதி இல்லாமல், இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்த முடியாது என்று தொடர்ந்து கூறி வருகிறது. காசா போர் நீடித்து வரும் சூழலில், அரபு உலகில் இஸ்ரேலுக்கு எதிரான மனநிலை தீவிரமடைந்துள்ளதால், இந்த நிலைப்பாட்டை மாற்றுவது சவூதிக்கு அரசியல் ரீதியாக மிகவும் சிக்கலானதாகக் கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் அதிக விவாதத்தை ஏற்படுத்தியுள்ள மற்றொரு விஷயம் யுரேனியம் செறிவூட்டல் ஆகும். தனது நாட்டிலேயே அணு எரிபொருளை உற்பத்தி செய்யும் திறனை சவூதி விரும்புகிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்தி திட்டங்கள் பின்னாளில் அணு ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 Benjamin Netanyahu

சவூதிக்கு அணுசக்தி தொழில்நுட்பம் வழங்கப்படுவது, பிராந்தியத்தில் புதிய ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தையும் இஸ்ரேல் வெளிப்படுத்தியுள்ளது.

டிரம்ப் விதித்திருக்கும் இந்த புதிய விதிமுறைகள், இஸ்ரேலுக்கு உறுதியளிக்கும் முயற்சியா அல்லது சவூதி அரேபியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் உத்தியா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், பாலஸ்தீன விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்ற சவூதி அரேபியா தயாராக இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

அமெரிக்கா - சவுதி அணுசக்தி ஒப்பந்தம் | ஈரானுக்கு புதிய அழுத்தமா? பின்னணி என்ன?
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai