Dailyhunt
சிபிஎஸ்இ பள்ளிகளில் 3 மொழி கொள்கை.. ஸ்டாலின் விமர்சனம்.. தர்மேந்திர பிரதான் பதிலடி.!

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3 மொழி கொள்கை.. ஸ்டாலின் விமர்சனம்.. தர்மேந்திர பிரதான் பதிலடி.!

தேசியக்கல்வி கொள்ளை 2020-ன் படி, 2026-2027 கல்வி ஆண்டிலிருந்து 6-ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்படும் என சிபிஎஸ்இ சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதற்கு, எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் சிபிஎஸ்இ-ன் முடிவை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அப்பதிவில், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்பது சாதாரண கல்விச் சீர்திருத்தம் அல்ல, அது மொழித் திணிப்பை நோக்கிய, நாம் நீண்டகாலமாக வெளிப்படுத்தி வந்த அச்சங்களை உறுதிப்படுத்தும் வகையிலான, ஆழ்ந்த கவலைக்குரிய முயற்சியாகும்.

 சிபிஎஸ்இ பள்ளி

தென் மாநில மாணவர்களைப் பொறுத்தவரையில், இந்தத் திட்டம், கட்டாய இந்தி என்பதைக் கடந்து வேறேதுமில்லை. இருப்பினும், இதில் ஒருவருக்கொருவர் இடையிலான பரிமாற்றம் எங்கே இருக்கிறது? இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் அல்லது வங்கம், மராத்தி உள்ளிட்ட மொழிகளைக் கட்டாயமாகப் படிப்பார்களா? இதுகுறித்த தெளிவின்மை, இதிலுள்ள ஒருசார்பையும் - பாகுபாட்டையும் வெளிப்படுத்துகிறது" எனத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, இந்தியாவின் வலிமை என்பது, பன்முகத்தன்மையில்தான் இருக்கிறதே தவிர, திணிக்கப்படும் ஒற்றைத்தன்மையில் இல்லை. இந்தச் சமநிலையைக் குலைக்கும் எத்தகைய முயற்சிகளும் தவறானவை மட்டுமல்ல, ஆபத்தானதுமாகும் எனவும் விமர்சித்திருந்தார்.

தமிழக தேர்தல்| Full Force-ஐ இறக்கும் பாஜக.. 6 மாநில முதல்வர்கள் பரப்புரை!

இந்த சூழலில் தான், முதல்வர் ஸ்டாலினின் இந்தக் கருத்தை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக அரசாங்கம் பிளவுபடுத்தும் வாக்கு வங்கிப் பிரச்சாரத்திற்காகத் தமிழ் மாணவர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது என குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்த அவரின் பதிவில், "பன்மொழித் திறன் கொண்ட உலகளாவிய தலைவர்களாக மாறுவதற்கான வாய்ப்பு. பன்மொழித் திறனை ஒரு அச்சுறுத்தலாகச் சித்தரிப்பது தவறானது. கூடுதல் மொழிகளைக் கற்பதால் தமிழ் பலவீனமடைவதில்லை. மாறாக, அதன் பேச்சாளர்கள் பன்மொழித் திறன் கொண்டவர்களாகவும், தன்னம்பிக்கையுடனும், மொழியியல் ரீதியாக வலுவூட்டப்பட்டவர்களாகவும் இருக்கும்போது அது செழுமையடைகிறது.

மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களை இந்திய மொழிகளைக் கற்கத் தீவிரமாக ஊக்குவிக்கும் வேளையில், திமுக அரசாங்கம் பிளவுபடுத்தும் வாக்கு வங்கிப் பிரச்சாரத்திற்காகத் தமிழ் மாணவர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. தமிழ்நாட்டில் நவோதயா வித்யாலயங்களை நிறுவ வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், திமுக அரசு கல்வி சமத்துவத்தை விட அரசியல் நோக்கங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றின் அமலாக்கத்தைத் தொடர்ந்து தடுத்து வருகிறது. ஒரு முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சீர்திருத்தத்தை 'மொழித் திணிப்பு' என்று தவறாக சித்தரிப்பது, தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் உருவாக்கும் நோக்கம் கொண்டது" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

OPINION : திமுக தீய சக்தியா? யாருக்கு? - சூர்யா கிருஷ்ணமூர்த்தி
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai