தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் தவெக தனிப் பெரும்பான்மையாக 108 இடங்களில் வெற்றி பெற்றுக்கிறது.
எனினும், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. ஆட்சியமைக்க இன்னும் கூடுதலாக 6 இடங்கள் தேவையாக இருக்கும் சூழலில், விசிக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவையும் தவெக கோரிவந்தது.

இந்தநிலையில் தான், இன்று தவெக தலைவர் விஜய் முதல்வராவதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் தெரித்திருக்கின்றனர். தொடர்ந்து, சிபிஐஎம்-ன் மாநில செயலாளர் பெ. சண்முகம் மற்றும் சிபிஐ-ன் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, தவெகவுக்கு ஆதரவு ஏன்? என்பது குறித்தும் திமுகவுடனான கூட்டணி தொடருமா? என்பது குறித்தும் விளக்கியிருக்கின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், தமிழ்நாட்டு மக்கள் தமிழக வெற்றிக் கழகத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த சூழலில், மக்கள் ஜனநாயகத்தை முன்மொழிந்திருக்கிறார்கள் அதை நாங்கள் வழிமொழிகிறோம். அதன்படியே, தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என முடிவு செய்துள்ளோம். தமிழ்நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு அமைய வேண்டும் என்பது அவசியம். அதேசயம், குடியரசு ஆட்சியை கொண்டுவர பாஜக முயற்சி செய்கிறது. இதை தடுக்கவே, தவெகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். அதேபோல, மத்திய பாஜக அரசு மாநில உரிமைகளை பறிக்க முற்படும் போது திமுகவுடன் இணைந்து போராடுவோம். தவெக அரசுக்கு மட்டுமே ஆதரவு அளிக்கிறோம். அக்கட்சியுடன் கூட்டணி இல்லை" என சிபிஐ மற்றும் சிபிஐஎம் கட்சியின் மாநில செயலாளர்கள் கூட்டாக அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

