ChatGPT, Gemini, தானியங்கி வாகனங்கள், AI ரோபோக்கள் என செயற்கை நுண்ணறிவு இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.
ஆனால், "Artificial Intelligence" என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது 1955-ம் ஆண்டில்தான். அமெரிக்காவின் டார்ட்மத் கல்லூரியில் (Dartmouth College) நடைபெற்ற கோடைக்கால ஆய்வுத் திட்டத்துக்கான ஒரு முன்மொழிவில், Artificial Intelligence என்ற வார்த்தை முதன்முறையாக இடம்பெற்றது. கணினி விஞ்ஞானி ஜான் மெக்கார்த்தி (John McCarthy) இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். இவரே பின்னாட்களில் செயற்கை நுண்ணறிவின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
AIஅவருடன் மார்வின் எல். மின்ஸ்கி, நத்தானியேல் ரோசெஸ்டர் மற்றும் கிளாட் இ. ஷானன் ஆகியோரும் இணைந்து அந்த ஆய்வுத் திட்டத்துக்கான முன்மொழிவை உருவாக்கினர். கற்றலின் ஒவ்வொரு அம்சத்தையும், மனித நுண்ணறிவின் பிற செயல்பாடுகளையும் துல்லியமாக வரையறுக்க முடியும். அவற்றை இயந்திரங்கள் பின்பற்றி செயல்படும் வகையிலும் உருவாக்க முடியும். அதாவது, மனிதர்களின் அறிவாற்றல் செயல்பாடுகளை துல்லியமாகப் புரிந்துகொண்டு, அவற்றை இயந்திரங்களாலும் செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கையே இந்த ஆய்வின் அடிப்படையாக இருந்தது.
அந்தக் காலகட்டத்தில் கணினிகள் இன்றைய அளவுக்கு சக்திவாய்ந்ததாக இல்லை. தகவல்களைச் சேமிப்பது, கணக்கீடுகளைச் செய்வது போன்ற பணிகளுக்கே அவை பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. ஆனால், மனித அறிவாற்றலைப் போன்ற திறன்களை இயந்திரங்களில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போது வேகமாக வளரத் தொடங்கியது. அதன்பிறகு கடந்த 71 ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ளது.
meta AI இன்று மருத்துவத்தில் நோய்களைக் கண்டறிவது முதல், விண்வெளி ஆராய்ச்சி வரை ஏஐ பயன்படுத்தப்படுகிறது. கல்வி, வணிகம், சினிமா, செய்தித்துறை, வங்கித்துறை என பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது, கட்டுரைகள் எழுதுவது, படங்களை உருவாக்குவது, மொழிபெயர்ப்பது என பல பணிகளையும் AI தற்போது சில நொடிகளில் செய்து முடிக்கிறது.
ஒரு காலத்தில் எதிர்கால தொழில்நுட்பமாகக் கருதப்பட்ட Artificial Intelligence, இன்று நம் கண்முன்னே நிகழ்கால தொழில்நுட்பமாக மாறிவிட்டது. 1955-ல் ஒரு ஆய்வுத் திட்டத்தில் இடம்பெற்ற அந்த இரண்டு வார்த்தைகள்.. இன்று ஒட்டுமொத்த உலகின் தொழில்நுட்பப் பயணத்தையே மாற்றியமைத்திருக்கின்றன.
புரட்டி எடுத்த எட்வார்ட் புயல்.. அஞ்சி நடுங்கும் மக்கள்.. அடுத்தடுத்து யுத்தம் செய்யும் இயற்கை!
