Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உதயநிதியா? கனிமொழியா? திமுகவை யார் வழிநடத்த வேண்டும் - நிர்மல் குமார் விமர்சனம்

உதயநிதியா? கனிமொழியா? திமுகவை யார் வழிநடத்த வேண்டும் - நிர்மல் குமார் விமர்சனம்

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் கடந்த ஜூன் 20ம் தேதி முதல் இளைஞர்கள் போராடி வந்த நிலையில், ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்ற பேரணியின் போது அவர்களை தடுத்து நிறுத்திய டெல்லி காவல்துறை கடுமையான தாக்குதலை நடத்தியிருந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெறத் தொடங்கின. எனினும், சென்னை எழும்பூரில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற மாணவர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக காவல்துறை கைது செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

 நீட்-க்கு எதிரான போராட்டம்

இதையடுத்து, நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என நினைக்கும் முதல்வர் விஜய் அமைதிக் காப்பது ஏன்? போராடக்கூடிய மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தது ஏன்? என போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்தசூழலில் தான், தவெக முழுமையான நீட் விளக்கு கேட்பதாகவும், நீட் தேர்வை முறைபடுத்த கூறுவது பல ஆண்டு காலமான தமிழ்நாட்டின் நீட் எதிர்ப்பு போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் எனவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டது.

இந்தசூழலில் தான், இளைஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதற்கிடையில் தமிழ்நாட்டில், நடைபெற்ற போராட்டம் ஒரு கட்சியினர் ஊடுருவி தவெக அரசுக்கு எதிரான பரப்புரை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில், நேற்று சென்னை போராட்டம் நடைபெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகமான பாலன் இல்லத்திற்கு சென்ற அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, அங்கிருந்த சிலர் 'வெளியே போ' என்ற வகையில் கோஷம் எழுப்பியிருந்தது பேசுபொருளாகியிருந்தது.

 நிர்மல் குமார்

இச்சூழலில், இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமாரிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசுகையில், "நீட் தேர்வு சீரமைப்பு மற்றும் எதிர்ப்புப் போராட்டங்களில் திமுகவினர் பணம் கொடுத்து, 'Gen Z டிஎம்கே' டி-சர்ட் அணியச் செய்து ஆட்களை உட்கார வைத்திருந்தனர். மேலும், உதயநிதி ஸ்டாலின் இதுபோன்ற கோமாளித்தனமான செயல்களைக் கைவிட்டு, உருப்படியாக ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல, அண்ணா தொடங்கிய திமுகவை வழிநடத்த உதயநிதியா, கனிமொழியா யாருக்கு தகுதி இருக்கிறது என திமுகவினர் ஒன்றிய, கிளை நிர்வாகிகளை அழைத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும். முடிவுகளைக் கூட வெளியிட வேண்டாம். அதை வைத்து உதயநிதி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தவெக உறுதியாக உள்ளது. தவெகவினர் கொடி, பேனர் இன்றி மாணவர்களின் உணர்வுபூர்வமான போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தின் வெற்றியாகவே மத்திய அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

கைராசியான டாக்டரில் இருந்து பாமக நிறுவனர்.. 1990களின் தவிர்க்க முடியாத அரசியல் வரலாறு!!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai