Dailyhunt
விண்ணில் பாய்ந்த விண்கலம்.. 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறை.. நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா!

விண்ணில் பாய்ந்த விண்கலம்.. 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறை.. நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா!

ல்வேறு காரணங்களால் தாமதமான சூழலில் தடைகளை கடந்து இன்று ஆர்டெமிஸ்-2 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ஆர்டெமிஸ்-2 மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 1969ஆம் ஆண்டுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான, ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா துவங்கியது. பல்வேறு காரணங்களால் தாமதமான சூழலில் தடைகளை கடந்து இன்று ஆர்டெமிஸ்-2 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக நிலவைச் சுற்றி வருவார்கள். இந்த பயணம் மனிதர்கள் இதுவரை சென்றதைவிட பூமியிலிருந்து கூடுதல் தூரம் செல்லும் முயற்சியாகும். மேலும் நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் இந்த திட்டம், மனித விண்வெளி ஆய்வில் புதிய கட்டத்தைத் தொடங்குகிறது.

 நாசா விண்வெளி வீரர்கள்

இந்த விண்வெளி பயணத்தில் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் ஆகிய அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 3 வீரர்களும், கனடாவைச் சேர்ந்த ஜெரமி ஹான்சென் என்ற வீரர் ஒருவரும் பயணித்துள்ளனர். இதில், நிலவுக்குச் செல்லும் அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற பெருமையை கிறிஸ்டினா கோச் பெறுகிறார். அதுபோல், நிலவுக்குச் செல்லும் முதல் அமெரிக்கர் அல்லாத விண்வெளி வீரர் என்ற பெருமையை ஜெரமி ஹான்சென் பெறுகிறார். அவர்களது பயணம் 10 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஓரியன் விண்கலம் முதல்நாள் முழுவதும் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றிவந்த பின்னர் நிலவை நோக்கிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஓரியன் விண்கலம் நிலவைச் சுற்றி வந்தபின்னர் பூமிக்குத் திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 10 நாள் பயணத்தின் முக்கிய நோக்கம், விண்கலத்தின் பாதுகாப்பு மற்றும் அதில் உள்ள உயிர் காக்கும் அமைப்புகளைச் சோதிப்பதே ஆகும். இதன் வெற்றியைத் தொடர்ந்து, 2028-ம் ஆண்டில் மனிதர்களை நிலவில் தரை இறக்க நாசா திட்டமிட்டுள்ளது.

விண்வெளி வரலாற்றில் முதன்முறை | உத்தரவைப் பிறப்பித்த நாசா.. பூமிக்குத் திரும்பிய வீரர்கள்!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai