பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலே அதிகப்பட்ச நன்மைகளை அளிக்கும் என்பது அனைத்து தாய்மார்களும் அறிந்ததுதான்.
இருப்பினும், எந்த வயதில் என்ன உணவு கொடுக்கலாம் என்பதில் நிறைய குழப்பங்கள் இருக்கும். குறிப்பாக 1 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு உணவு அளிப்பதில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து குழந்தை நல மருத்துவர் Dr. நிவேதிதா சி கூறியதாவது, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் மட்டுமே முதன்மை ஊட்டச்சத்தாக இருக்கக்கூடும். அதற்கு பிறகு படிப்படியாக திட உணவுகளை அறிமுகப்படுத்தலாம்" என தெரிவித்தார்.
குழந்தைக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்?
6 மாதங்களுக்கு பிறகு எளிதில் ஜீரணமாகும் திட உணவுகளை குழந்தைகளுக்கு அளிப்பது சிறந்த முடிவாகும்.
- வாழைப்பழம் போன்ற மசிக்கப்பட்ட பழங்கள்
- வேகவைத்து மசிக்கப்பட்ட கேரட் போன்ற காய்கறிகள்
- நன்கு வேகவைத்த சாதம்
- நன்கு வேகவைத்து மசிக்கப்பட்ட பருப்பு வகைகள்
குறிப்பு: ஒவ்வொரு முறையும் ஒரு புதிய உணவை மட்டுமே அறிமுகப்படுத்தவும். அடுத்த உணவை அளிக்கும் முன்பு சில நாட்கள் காத்திருக்கவும். ஏனெனில், குழந்தைக்கு உணவு ஒவ்வாமை அல்லது செரிமான பிரச்சனை இருக்கா என்பதை கண்டறிய உதவும்.
மருத்துவர் நிவேதிதா கூற்றுப்படி, குழந்தை வளரும் போது, படிப்படியாக உணவின் தன்மையை மாற்ற வேண்டும். அதாவது முதலில் கூழ் வடிவமாக ஆரம்பித்துவிட்டு, பிறகு நன்றாக மசிக்கப்பட்ட உணவுகளை அளிக்கவும். அடுத்து, மென்மையான, சிறிய துண்டுகளாக கொடுக்க ஆரம்பிக்கவும்.
1 வயதுக்கு முன்பு தவிர்க்க வேண்டிய உணவுகள்
- தேன் : குழந்தைகளுக்கு 'பொட்டுலிசம்'எனப்படும் தீவிர குடல் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
- பசும்பால் : குழந்தையின் சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தத்தை அளிக்கும். இரும்பு போன்ற முக்கிய சத்துக்கள் கிடைக்காது
- நட்ஸ் : தொண்டையில் சிக்கிக்கொள்ளும் அபாயம் அதிகம் உள்ளது
- பதப்படுத்தப்பட்ட உணவுகள் : பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் தவிர்க்கவும்.
- உப்பு மற்றும் சர்க்கரை : இவை குழந்தைகளுக்கு ஆபத்தானது ஆகும். ஆரம்பகால வளர்ச்சியில் தீங்கு விளைவிக்கக்கூடியவை
குழந்தைகளுக்கு எப்போதும் இயற்கையான மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே வழங்க வேண்டும். குழந்தையின் மென்மையான செரிமான மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து உணவுகளும் தவிர்க்கவும்.
மருத்துவ நிபுணர் ஆலோசனை
பெங்களூரு ஆர்.ஆர். நகர் ஸ்பார்ஷ் மருத்துவமனையை சேர்ந்த Dr.நிவேதிதா சி (Paediatrician , Neonatologist, Paediatric Nutritionist), சமயம் தமிழுக்கு அளித்த தகவலின்பேரில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

