விண்வெளியில் அதிகரித்து வரும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் மனிதகுலத்திற்கு புதிய சவால்களை உருவாக்கும் என ஐரோப்பிய தெற்கு வானியல் ஆய்வு மையம் (ESO) எச்சரித்துள்ளது.
10 முதல் 17 லட்சம் செயற்கைக்கோள்கள் ஏவப்படும் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், இரவில் நட்சத்திரங்களைப் பார்ப்பது கடினமாகும். மேலும், விண்வெளி குப்பைகள் அதிகரித்து, எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இனி இரவில் நட்சத்திரங்களை பார்க்க முடியாதா?
பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது. இணைய சேவைகள், தொலைத்தொடர்பு, காலநிலை கண்காணிப்பு, ராணுவத் தேவைகள், வழிகாட்டும் தொழில்நுட்பம் (GPS), பூமி கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக உலக நாடுகளும், தனியார் நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஐரோப்பிய தெற்கு வானியல் ஆய்வு மையம் (European Southern Observatory - ESO) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு, விண்வெளியில் கட்டுப்பாடற்ற அளவில் செயற்கைக்கோள்கள் அதிகரிப்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.
17 லட்சம் செயற்கைக்கோள்கள் வரை ஏவ திட்டம்
தற்போது உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் 'Satellite Mega Constellation' திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக அதிவேக இணைய சேவைக்காக ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை குறைந்த உயர சுற்றுப்பாதையில் (Low Earth Orbit - LEO) நிலைநிறுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், எதிர்காலத்தில் 10 லட்சம் முதல் 17 லட்சம் செயற்கைக்கோள்கள் வரை பூமியைச் சுற்றி இயங்கும் நிலை உருவாகலாம் என்று ESO ஆய்வு தெரிவிக்கிறது.
அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் சூரிய ஒளியை பிரதிபலிப்பதால், இரவு வானம் இயற்கையாக இருக்காது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சாதாரணமாக சூரியன் மறைந்த பிறகு வானம் இருண்டு, நட்சத்திரங்கள் தெளிவாக தெரியும். ஆனால், ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் சூரிய ஒளியை பிரதிபலித்தால், வானத்தில் செயற்கையான வெளிச்சம் அதிகரிக்கும். இதனால் வெறும் கண்களால் நட்சத்திரங்களைப் பார்ப்பதும், தொலைநோக்கிகள் மூலம் ஆழமான விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்வதும் கடினமாகும்.
விண்வெளி குப்பைகள் அதிகரிக்கும் அபாயம்
செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மற்றொரு முக்கிய பாதிப்பு, விண்வெளி குப்பைகள் (Space Debris) உருவாகும் அபாயம் ஆகும்.
ஒரு செயற்கைக்கோள் மற்றொன்றுடன் மோதினால், ஆயிரக்கணக்கில் அல்ல, பல லட்சக்கணக்கான சிறிய துண்டுகள் உருவாகும். இவை அனைத்தும் மிக அதிக வேகத்தில் பூமியைச் சுற்றுவதால், மற்ற செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையம் போன்றவற்றுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
இதையே விஞ்ஞானிகள்"Kessler Syndrome" எனப்படும் தொடர் மோதல் அபாயமாக விளக்குகின்றனர். ஒரு மோதல் ஏற்பட்டால், அதனால் உருவாகும் குப்பைகள் மேலும் பல மோதல்களுக்கு வழிவகுக்கும் சங்கிலித் தாக்கம் உருவாகும்.
அமெரிக்க விண்வெளி கண்காணிப்பு தரவுகளின்படி, தற்போது பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 14,000 செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் உள்ளன. இதற்கு மேலாக, பயன்பாடு முடிந்த செயற்கைக்கோள்கள் மற்றும் கோடிக்கணக்கான சிறிய விண்வெளி குப்பைகளும் சுற்றிவருகின்றன.

